காவல் துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய, காவல் துறைக்கு அதிகாரம் உள்ளதாக, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று (18) தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும்,அழைப்பாணை விடுக்குமாறு, காவல் துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, நீதிமன்றத்திடம் வேண்டுகோள்விடுத்தது.
இந்த கோரிக்கையை பரீசிலித்த போதே, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், உப காவல் துறை அதிகாரி காவல் துறை மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
காவல் துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல் துறை நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் தொகுதி இலக்கம் 7இல் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கே இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
காவல் துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு வளாகத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதன்போது மஹிந்த ராஜபக்ஷவும் உடனிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை ஒன்றுக்காக புதன்கிழமை (16) ரோஹித ராஜபக்ஷ காவல் துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஆஜராக வந்த சந்தர்ப்பத்திலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறித்த அதிகாரிக்கு இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் நாமல் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அதிகாரியும் உடனிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.