மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்டபட்ட தளவாய்க் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலைக்கு சொந்தமான மைதானம் 1935ம் ஆண்டிலிருந்து பாடசாலை மைதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் இக் காணியினை, அண்மித்த சில நாட்களுக்கு முன்பு சகோதர சமூகத்ததை சேர்ந்த ஒருவர் இக் காணி தனக்குரியது என கூறி, வேலியமைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இக் காணி அபகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாகவும் கூறியிருந்தார்.
இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சம்மந்தப்பட்டவர்களுடன் எட்டுக்கு மேற்பட்ட தடவைகள் அவர்களை நேரடியாக சந்தித்துப் பேசினார். பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பல தடவை இவ் முயற்சியில் ஈடுபட்ட தளவாய் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மோகன் அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர். சம்பந்தப்பட்டவர்களும் காணியை ஒப்படைக்க முன் வந்தனர். இன்று 19.08.2017 ஆகிய இன்று சம்பந்தப்பட்ட தரப்பினரையும் தளவாய் பாடசாலை மைதானக்காணிக்கு அழைத்து, காணி ஒப்படைப்பு தொடர்பாக பேசியதுடன், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர், தளவாய் கிராம இளைஞர்கள் முன்னிலையிலே பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் காணியை பெற்றுக் கொடுத்தார். அவரும் கிராமத் தலைவர், பாடசாலை அபிவிருத்தி சங்கத் செயலாளர் மற்றும் மக்கள் மேற்கொண்ட முயற்சியினால் இம் மைதானம் தளவாய் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இக்காணியினை தளவாய் கிராம மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் முழு முயற்சியாக செயற்பட்டு வந்த பா.உ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களுக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் மோகன் அவர்களும், பாடசாலை அபிவிருத்திச்சங்க நிருவாகத்தினரும், மற்றும் மக்களும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
“பரஸ்பரம், புரிந்துணர்வு அடிப்படையில் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். மாறாக யாரையும் யாரும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். பேசுவதனால் இன ஐக்கியம் வராது. நல்ல செயற்பாடுகளே இன ஐக்கியத்தைக் கொண்டு வரும். அந்த அடிப்படையில் காணியை ஒப்படைக்க முற்பட்ட செயற்பாட்டை பார்க்கின்றேன்.
நாம் மேற்க்கொண்ட கலந்துரையாடலின் மூலம் தாமாக காணியை ஒப்படைக்க முற்பட்ட சகோதர இனத்து நபர்களை பாராட்டுகிறேன். முப்பது வருடத்துக்கு மேற்பட்ட யுத்தத்தில் எந்த அரச காணியையும் யாரும் எடுத்துக் கொள்ளாத வகையில் பாதுகாத்த பெருமை எம் தமிழ் மக்களைச் சாரும். இன்று அவர்கள் பாதுகாத்த காணிகள் அவர்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. பலரும் ஏன் இந்த மாவட்டத்தோடு சம்மந்தப்படாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூட பெற்றிருக்கிறார்கள். இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. முப்பது வருட யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புக்கு, வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அக் காணிகள் பெரிதும் வழங்கப்பட வேண்டும்.