தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டிருந்த நம்பிக்கை அற்றுப் போயிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த அரசின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, முண்டு கொடுத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் முகத்தில் கரிபூசுகின்ற வகையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளே அவரை இந்த நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன.
அரச தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீதும், அவர்களுக்குப் பின்னால் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தூணாகக் கருதப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அளவற்ற நம்பிக்கை வைத்து, அரசியல் ரீதியிலான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் எதிர்பார்த்தவாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
குறிப்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிட வேண்டும் என அவர் விரும்பியிருந்தார். அரசியல் ரீதியான விருப்பத்திற்கு அப்பால், 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வை எட்டிவிட முடியும் என்று அவர் நம்பியிருந்தார்.
ஆனால் அரசியல் ரீதியான அந்த நம்பிக்கை படிப்படியாகத் தேய்ந்து, அவரை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.
இந்த ஏமாற்றமானது, அவரை நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அரசியல் ரீதியாக சீற்றம் கொள்ளச் செய்திருக்கின்றது என்றே கூற வேண்டும். அதன் காரணமாகத்தான், ஐநா செயலாளர் நாயகத்தையும், உலக நாடுகளையும் இலங்கை விவகாரங்களில் தலையிட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என கடிதங்கள் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
நிபந்தனையற்ற அரசியல் ஆதரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்தில் வெற்றிபெற்றதையடுத்து, தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ, அல்லது நீண்ட காலமாக, தமிழ் மக்களை வருத்திக்கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு ஒரு தேசிய தலைவர் என்ற ரீதியில் ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கோ அவர் உளப்பூர்வமாக முயற்சிக்கவே இல்லை.
மாறாக யுத்தத்தில் அடைந்த வெற்றியை நீண்டகாலம் ஜனாதிபதி பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்கான ஒரு கருவியாக அவர் பயன்படுத்தினார். அது மட்டுமல்லாமல், யுத்த வெற்றியை அரசியல் ரீதியாகப் பூதாகரமாக்கி, அதனை சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்தி இருந்தார்.
இது அவரை ஏதேச்சதிகார வழியில் பயணிக்கச் செய்திருந்தது.
அதேவேளை. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை சவால்களுக்கு உட்படுத்தும் வகையில் அவர் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியிலான உறவுகளைப் பேணியிருந்தார். இது இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களையும் கேள்விக்கு உள்ளாக்குவதாக அமைந்திருந்தது.
உள்ளுரில் ஜனநாயகத்தைத் துவம்சம் செய்து, சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்ததுடன், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின், அரசியல் ரீதியான அதிருப்தியையும் அவர் சம்பாதித்திருந்தார். அதன் காரணமாகவே, அவரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளில் வெளிச்சக்திகளும் செல்வாக்கைப் பிரயோகித்திருந்தன.
இந்த செல்வாக்கே, ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்து, மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழியேற்படுத்தியிருந்தது.
அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ ரீதியிலான அரசியல் ஒடுக்குமுறைகளிலும், மத ரீதியிலான அடக்குமுறைகளிலும் சிக்கி, வெறுப்புற்றிருந்த சிறுபான்மை தேசிய இனங்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களும் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கும், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் துணை புரிந்திருந்தன.
தமிழ் மக்களின் சார்பில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மைத்திரிபால சிறசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகிய மும்மூர்த்திகளும், அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு, பேருதவி புரிந்திருந்தார்.
இந்த நிபந்தனையற்ற அரசியல் ஆதரவுக்குப் பதிலுபகாரமாக, தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நாளாந்த எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகாரப்பரவலாக்கலைக் கொண்ட அரசியல் தீர்வு காணப்படும் என்றும் நல்லாட்சி அரசாங்கத்தினருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
புதிய அரியலமைப்பும் அரசியல் தீர்வும்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வாத்திகாரப் போக்கிற்கு இட்டுச் சென்றிருந்தது. அத்தகைய நிலைமை இனிமேலும் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும் என்பது நல்லாட்சி அரசாங்கத்தினருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.
அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள தேசிய அரசியல் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும், அதனையொட்டி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் வரலாற்று ரீதியாகத் தோல்வியையே கண்டிருந்தன.
எனவே, வெறும் பேச்சுவார்த்தைகளினாலும், ஒப்பந்தங்களினாலும் அரசியல் தீர்வு காண முடியாது என்ற பட்டறிவை தமிழ் அரசியல் தலைவர்கள் பெற்றிருந்தனர். எனவே, அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் ஊடாகத்தான் நிலையானதோர் அரசியல் தீர்வை எட்ட முடியும் என்ற தெளிவை அவர்கள் பெற்றிருந்தனர்.
அதனடிப்படையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவேண்டும் என்ற தேலையைக் கொண்டிருந்த நல்லரசாங்கத்தினருடைய நிலைப்பாடு, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான வழியைத் திறந்துவிட்டிருந்தது.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதமருடைய அதிகாரத்தை மேலோங்கச் செய்வதற்கும், தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் ஏற்ற வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவை நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருந்தது.
எனவே புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சி;னைக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்த தமிழ் தரப்பினர் குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முனைந்திருந்தார்.
அதன் காரணமாகவே ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம், தேர்தல் முறையில் மாற்றம் என்பவற்றுடன் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண்பது என்ற விடயத்தையும் உள்ளடக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நடந்ததென்ன?
நிறைவேற்று அதிகார பலம் கொண்ட ஜனாதிபதியாக அரசியலில் அதியுச்ச அதிகாரங்களைக் கொண்டு தனிக்காட்டு ராஜாவாக அரசோச்சிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவராகக் கூட தலையெடுக்க முடியாத அளவுக்கு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தோல்வியை அவரால் எளிதில் சீரணிக்க முடியவில்லை. இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் நிலையில் அவர் பெற்றிருந்த வாக்குகளின் அடிப்படையில் மக்களுடைய ஆதரவை மேலும் விரிவுபடுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பகீரத முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என அரசியல் ரீதியாகத் துடித்துக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு பெருகத்தக்க வகையிலான எந்தவொரு காரியமும் தமிழர் தரப்பு அரசியல் செயற்பாடுகள் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சகிதம் மிகத் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்பும், தமிழ் மக்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரச தரப்பினர் உரிய முன்னேற்றத்தைக் காட்டவில்லை.
பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டனவே தவிர அவற்றை நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் பல்வேறு வழிமுறைகளில் வற்புறுத்திய போதிலும், அதற்கு கூட்டமைப்பின் தலைமை இடம் கொடுக்கவில்லை.
தங்களால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான அரசியல் நடவடிக்கைகள், நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பைப் பாதிக்கத் தக்க வகையில், இன மத ரீதியாக துவேசங்களைப் பரப்பி, தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அரசியல் அலையை ஏற்படுத்திவிடும் என்பதைச் சுட்டிக்காட்டி, கூட்டமைப்பும் தமிழ் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்தி வந்தார்.
நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் தொடர்ச்சியாக ஊட்டி வந்தார். இதனை ஒரு வகையில் அரசாங்கத்திற்கு சார்பானதோர் அரசியல் பிரசாரமாகவே அவருடைய வழிநடத்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை முன்னெடுத்து வந்தது என்றே கூற வேண்டும்.
மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள்
இடம்பெயர்ந்த மக்களுடைய காணிகளைக் கைப்பற்றி அவற்றில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதன் காரணமாக யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்களாகிவிட்ட போதிலும், இடம்பெயர்ந்திருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலைமை தொடர்ந்தது.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை உள்ளடக்கிய போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தமும் தொடர்ந்திருந்தது.
இந்தப் பின்னணியில், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும், யுத்தம் முடிவுக்கு வந்து, முன்னாள் போராளிகளான் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள், அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமான சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைளை முன்வைத்து பாதிக்கப்பட்ட மக்களினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தமது கஸ்டங்களையும் துன்பங்களையும் நன்கு புரிந்துகொண்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு நேர்மையான முறையில் விரைந்து தீர்வுகளைத் தரும் என்று தமிழ் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நிறைவேற்றத்தக்க வகையில் அரசாங்கம் செயற்படத் தவறியிருந்ததன் காரணமாகவே மக்கள் தாங்களாகவே போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.
அரசியல் தலைமையின்றி பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களே எழுச்சி பெற்று நடத்திய இந்தப் போராட்டங்களுக்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போதிய அளவில் தலைமைத்துவத்தை வழங்கவோ அவற்றை உரிய முறையில் வழிநடத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கோ முன்வரவில்லை.
நிலைமாற்றம்
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருசிலர் கூட்டமைப்பின் தலைமை மீது எரிச்சலும் சீற்றமும் கொண்டிருந்தார்கள். இந்த எரிச்சலும், சீற்றமுமே கூட்டமைப்பின் தலைவர்களை மிகத் தீவிரமான முறையில் கண்டிக்கின்ற செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடத் தூண்டியிருந்தன.
பாதிக்கப்பட்ட மக்களின் அதி உச்ச கட்டத்திலான இந்த உணர்ச்சி வெளிப்பாடானது, தமிழரசுக் கட்சிக்கு அரசியல் ரீதியாக அபகீர்த்தி உண்டாக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயற்பாடாகக்கூட நோக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாகக் காலம் கடத்தி வருகின்றது. மக்களுடைய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.
எனவே, காலம் கடத்துகின்ற அரசாங்தக்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற பங்காளிக்கட்சிகளினது கோரிக்கையும், பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் உரிய முறையில் கூட்டமைப்பின் தலைமையினால் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி உணர்வை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
இத்தகைய நிலைமையிலேயே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து ஐநா மன்றத்தையும் சர்வதேச நாடுகளையும் நோக்கி அபயம் கோரி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
கேப்பாப்பிலவு காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சமப்ந்தனிடம் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அந்த உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்து உடனடியாக காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் காணிக்காக போராட்டம் நடத்தி வருகின்ற மக்களிடம் வாக்களித்திருந்தார். ஆனால், அவர் கூறியவாறு காணிகளைக் கைவிடுவதற்கு இராணுவம் முன்வரவில்லை.
இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பாக அவர் எழுதிய கடிதத்திற்கு அரசாங்கத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
அதனால் பொறுமை இழந்த நிலையில் தான் பொறுமை இழந்திருப்பதைத் தொனி செய்து மீண்டும் அவர் எழுதிய கடிதத்திற்கும் அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காக வாக்களித்த தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள் எனவே, உடனடியாகப் பிர்சசினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என தெரிவித்து அனுப்பிய கடிதங்களுக்குப் பதிலளிக்காதது மட்டுமல்ல. நேரடியான பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
இதனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய தன்னுடன் அரசாங்கம் பாராமுகமாக நடந்து கொள்கின்றது என்ற உணர்வின் காரணமாகத்தான், இனிமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையிலேயே, ஐநா செயலாளர் நாயகத்தையும் சர்வதேச நாடுகளையும் அவர் நாடியிருப்பதாகத் தெரிகின்றது.
ஐநாவும் சர்வதேசமும் உதவிக்கு ஓடி வருமா…..?
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் மொத்தமாக நான்கு பிரேரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று பிரேரணைகள் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறுவதுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன.
குறிப்பாக நான்காவது பிரேரணை, பிரேரணைகளில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கென மேலதிகமக இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக ஐநா மன்றம் இலங்கை விவகாரத்தில் கவனம் செலுத்தி வந்துள்ள போதிலும்,, ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுத்தடிப்பான போக்கையை கடைப்பிடித்து வருகின்றது.
இந்த நிலையில், மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுடன் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட விடயங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அழுத்தங்களை இதுவரையில் பிரயோகித்திருக்கவில்லை.
ஐநா மன்றத்தின் இந்தப் போக்கில் உடனடியாக மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை.
அதேவேளை சர்வதேச நாடுகளும் நல்லாட்சி அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை பல்வேறு வழிகளில் வலியுறுத்தியிருக்கின்றனவே தவிர, அரசாங்கத்திற்கு அதுதொடர்பில் நேரடியான அழுத்தங்களைப் பிரயோகிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இதற்கு விதிவிலக்காக ஐரோப்பிய ஒன்றியம் மாத்திரமே மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் சிறபான்மை மக்கள் விவகாரம் என்பவற்றை முதன்மைப்படுத்தி, ஜிஎஸ்பி வரிச்சலுகை விடயத்தில் நேரடியாக அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தது.
எனவே, இப்போதைய நிலையில் இலங்கையில் தலையீடு செய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஐநா மன்றத்திடமும், சர்வதேச நாடுகளிடமும் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்க்கப்படுமா என்பது தெரியவில்லை.
ஐநா மன்றத்திற்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு உடனடியான காரணங்களோ அல்லது தேவைகளோ இருப்பதாகவும் தெரியவில்லை.
அதேநேரத்தில் ஐநா மன்றமும், சர்வதேச நாடுகளும் சம்பந்தனின் கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருடைய கோரிக்கையாகவா அல்லது இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருiடைய கோரிக்கையாகவா – எந்த வகையில் நோக்கப் போகின்றன என்பதும் தெரியவில்லை.
கூட்டமைப்பின் தலைவர் என்பதிலும் பார்க்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவருடைய கோரிக்கை நோக்கப்பட்டாலும்கூட, ஐநா மன்றத்திற்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ தங்களளவில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அவசரத் தேவை எதுவும் இருப்பதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை.
ஆனால், இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது.
ஆயினும், அந்த வகையில் இந்தியா மீண்டும் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையீடு செய்யுமா என்பது தெரியவில்லை.
போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் ஐநா மனித உரிமைப் பேரவையில் வழங்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயற்படவில்லை. அதேபோன்று அரசாங்கத்திற்குள்ளேயே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதமும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொண்டு வருகின்ற இழுத்தடிப்பு நிலையும் ஒன்றை மாத்திரம் நிச்சயமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக இப்போது நடுத்தெருவில் கொண்டு வந்துவிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதே அது.