ஈழ சினிமாவில் தமது திறமையை நிரூபிக்க பாடுபடும் இயக்குனர்களில் மதிசுதாவும் ஒருவர். போராட்ட காலங்களில் தம்மை அர்ப்பணிப்புடன் அர்ப்பணித்த பலரில் இவரையும் ஒருவர் என்று சொல்லிக்கொண்டாலும் .எந்தவிதமான தவறுகள் செய்யாமலும் சிறைவாசம் அனுபவிப்பது இந்த இரத்தத்திற்க்கே சொந்தம் போலவே ஈழ சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற வெறியுடன் வெளியில் இருந்து சிறைவாசம் அனுபவிக்கும் இந்த படைப்பாளியின் படைப்பகளில் ஒன்றான ”துலைக்கோ போறியள்” என்ற படைப்பானது ஈழசினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் இவர் நுழைந்த போது எடுக்கப்பட்ட படைப்பாகவே என்னால் நோக்கப்படுகின்றது.அதனால் தான் இந்த படைப்பில் ஒரு ”கதைக்கரு” என்று இல்லாமல் நடைமுறையில் இருக்கும் சம்பவங்களை அப்படியே தொகுத்து வழங்கி இருக்கின்றார் மதிசுதா. இதனை ஒரு ஆவண படைப்பு என்று சொல்வதே மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
ஒரு திருடனின் நடைமுறை வாழ்க்கையையும், சாதியத்தையும், வெளிநாட்டவர்கள் ஈழத்திற்கு வந்தால் எவ்வாறாக நடந்துகொள்வார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஆவணமாகி இருக்கின்றார் மதிசுதா. இந்த படைப்பில் சொல்லப்பட்ட கருத்தானது பரவலாக ஈழத்தின் நிகழும் நடைமுறையையே விளக்கி நிற்கின்றது.
தனது உறங்கும் இடமாக சுடலையை தெரிவுசெய்த திருடனான நாயகன் எதனால் முகத்தை அவ்வாறு சுளித்து இருக்க கூடும்? வெயில் அதிகாலையில் முகத்தில் படும்போது நாயகன் கொடுத்த முக அசைவு ஏற்புடையதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. அது தவிர திருடனாக சித்தரிக்கப்பட்ட நடிகரின் நடிப்பானது உண்மையில் அவர் திருடன்தான் என்று எண்ணும் வண்ணமாக இருந்தது. குறிப்பாக திருடன் நடந்து செல்லும்போது அவரது கால் அசைவே அவர் திருடனாக தான் இருக்க கூடும் என்று எமக்கு விளக்கி நிற்கின்றது.
புத்திசாலியாக இருப்பவனால் தான் பாரிய திருடனாக பயணிக்க முடியும் என்பதனை விளக்க வந்தாலும் இடையிடையே பாவம் போன்ற முகத்தோற்றம் அடிவாங்கும் போது நிற்கும் நிலை, திருடனை முழுமையாக வெறுக்க முடியவில்லை. நல்ல ஒரு மனதுள்ள நபரே சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் சமூகத்தில் காணப்படும் ஏற்ற இறக்கங்களும் சாதிய சிந்தனைகளும் கூட ஒரு மனித வாழ்வை மாற்றி அமைக்கும் என்ற கருத்தையும் ஆணித்தரமாக கூறியதே இந்த ஆவணப்படத்தின் வெற்றியாக இருக்க முடியும். அது தவிர தலையை வார பயன்படுத்தும் குச்சிகள்
வெளிநாட்டுக்காரர் ஊருக்கு வந்தால் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதும் ”பள்ளிக்கூடத்துக்கு முன்னால் சிகரெட் குடிக்காதே” என்று சொல்லும் அதே நபர் வெளிநாட்டுக்காரரை உசுப்பேற்ற பேசும் பேச்சும் முரண். அதேபோல சாதியம் காக்க வேறு சொம்பில் தண்ணி கொடுக்கும் நபர் திருடனை தள்ளி விடுவதும் விழுந்தவுடன் தொட்டு தூங்குவதும் மீண்டும் முரண்.வெளிநாட்டுக்காரர் கூட சாதியம், திருவிழா செலவுக்கு எதிராக இருந்தாலும் தான் உழைக்கவேண்டும் என்பதற்க்காக கடைகள் கட்ட நினைப்பதும் முரண். திருடன் கூட கள்ளுக்காரனின் போத்தலை எடுத்த இடத்தில் விட்டுவிட்டு மீண்டும் எல்லாவற்றையும் திருடுவதும் முரண்.
ஒரு மனிதன் இருவேறு முகங்களை கொண்டவன் என்று காட்டிட நினைத்ததாக எடுக்க முடிகின்றது. ஆகவே ஆவண குறும்படம் முழுவதுமாக சினிமாத்தனம் இல்லாத முரண்களையும் நேரியல் சிந்தனையையும் பரப்பி நிற்கும் மனிதர்களுடன் பயணிப்பது ஆறுதல்.
வார்த்தை பிரயோகங்கள் அற்ற நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்த குறும்படம் நடிப்பில் வெற்றி பெற்றதா என்பதனை ரசிகர்கள் மட்டுமே கூறிட முடியும்.
மிகவும் சாதாரணமாக, நடைமுறை வாழ்வை படமாக்கி இருப்பதால் ஒளிப்பட, இசை, என்பவற்றில் தவறினை சுட்டி காட்டிட முடியவில்லை.
எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றிய சாதாரண மனிதரின் வாழ்வில் சினிமாத்தனம் ஏதும் இருக்க போவதில்லை என்பதே இந்த ஆவண குறும்படத்தின் வெற்றி எனலாம்.
மொத்தத்தில் ”துலைக்கோ போறியள்” தொலையாமல் எம் மனதில் ஆழமாக வேரூன்றியது.