இந்த ஆண்டில் பல தேர்தல்களை சந்திக்க வாய்ப்புள்ளதால், இன விகிதாசாரங்கைளக் கருத்திற்கொள்ளும் போது, வடக்கு கிழக்கில் யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசாரங்களே கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் தெரிவித்துள்ள அவர்,
இன விகிதாசாரங்களை கணிப்பிடும் போது நாட்டில் அமைதிச் சூழல் நிலவிய காலத்தில் உள்ள விகிதாசாரங்களையே கணிப்பிட வேண்டும்.
யுத்தத்தால் நாட்டை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். எனவே, மக்கள் வெளியேறுவதற்கு முன்பிருந்த விகிதாசாரமே கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 1983ஆம் ஆண்டு இன விகிதாசாரப்படி, தமிழர்கள்-42 சதவீதமும் முஸ்லிம்கள்-; 32 சதவீதமும், சிங்களவர்கள்-26 சதவீதமாகவும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நாட்டில் எற்பட்ட யுத்தத்தின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் சிலர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களும் நாட்டிற்கு முழுமையாக வந்து சேரவில்லை. இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது. எனவே தற்போதைய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்கள் பற்றிப் பேசக் கூடாது என்று சம்பந்தன் கூறியுள்ளார்.