ரெலோ அமைப்பு வடமாகாண முதலமைச்சருடன் இணைந்து சூட்சுமமாக எனது பதவியைப் பறித்து பழிவாங்கவேண்டுமென்ற நோக்கில் செயற்படுவதாக வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் நேற்று ரெலோ அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியிலிருந்து 6 மாதங்கள் வரை இடைநீக்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் சிறிகாந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அமைச்சர் ப. டெனீஸ்வரன் ஊடகங்களுக்கு இது குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ரெலோ கட்சியானது யாப்பு விதிகளுக்கு அமைவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்ற போர்வையில் எனது அமைச்சு பொறுப்பை கபடத்தனமாகவும் சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள்.
அந்தவகையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக நானும் நகரவேண்டி உள்ளதனால், கட்சியின் அடிப்படை உறுப்புரிமை இல்லாத ஒரு நபரை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தங்களுடைய கட்சியின் யாப்பில் இடம் இருக்கின்றதா?
அத்தோடு கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று கூறுவீர்கள் என்று சொன்னால், அத்தகைய உறுப்புரிமையானது எங்கு, எப்போது, எவ்வாறு, உறுப்புரிமை எனக்கு வழங்கபட்டது என்பதை தங்களால் எனக்கும் எமது மக்களுக்கும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியுமா? என்ற கேள்வியை பகிரங்கமாக ரெலோ கட்சிக்கு விடுத்துள்ளார்.
மேலும் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை தேர்தலின்போது தங்களின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் நான் போட்டியிட்டேன் என்பதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்வதோடு அதனை மக்களும் நன்கறிவார்கள்.
அந்தவகையில் தேர்தலின் பின்னர் அன்றிலிருந்து இன்றுவரை தங்களுடைய கட்சிக்கு நம்பிக்கையாகவும் அடிப்படைத் தொண்டன் என்ற வகையிலும் செயற்பட்டு வருவதனை தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகின்றேன்.
கட்சியும் கட்சியின் செயலாளர் நாயகமும் பலதடவைகள் தங்களுடைய கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் ஏறக்குறைய 21 கூட்டங்களில் ஒரு கூட்டத்திற்கே வந்துள்ளதாகவும் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இவ்வாறு தங்களுடைய கூட்டத்திற்கு வராமல் இருப்பதற்கான பல காரணங்கள் இருக்கின்றன, குறிப்பாக மாகாணசபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் முதன்முதலில் தங்கள் கட்சியினால் மன்னார் மாவட்டத்தில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்ட கூட்டமே எனக்கும் ரெலோ கட்சிக்குமிடையில் நடைபெற்ற முதலாவது கூட்டமாகும்.
அக்கூட்டத்தில் பல ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை தாங்கள் முன்வைத்தபோது அதற்கு எதிராக தனியொரு மனிதனாக குரல்கொடுத்து தங்களின் நிலைப்பாடு பிழை என்பதனை அன்றைய தினமே தெளிவாக சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்கு பின்னர் நடைபெற்ற 20 கூட்டங்களுக்கும் சமூகமளிக்கவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் ஏன் எதற்காக வரவில்லை என்ற காரணம் எனக்கும் தங்களுக்குமே தெரிந்தவிடயம், குறித்த காரணங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று தாங்கள் நினைத்தால் அதனை செய்வதற்கும் தயாராகவே உள்ளேன்.
மேலும் நான் ஒரு அடிப்படை உறுப்புரிமை பெற்ற உறுப்பினராக இருப்பின் தங்களுடைய கட்சியின் விதிகள் சரியாக இருக்குமெனில் மூன்று கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வராமல் இருக்கும்போதே அத்தகைய உறுப்பினர் தனது அடிப்படை உறுப்புரிமையினை இழக்கநேரிடும்.
சட்டம் மற்றும் யாப்பு விதிகளில் இது பொதுவாக காணப்படும் ஒரு ஏற்பாடாகும், அவ்வாறெனில் தொடர்ச்சியாக 20 கூட்டங்களுக்கு வராமல் இருந்த ஒரு உறுப்பினரை தாங்கள் ஏன் எதற்காக கட்சியிலிருந்து நீக்காமல் விட்டீர்கள்? என்ற கேள்வியையும் பகிரங்கமாகவே தங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
கட்சியானது முதலமைச்சரோடு சேர்ந்து சூட்சுமமாக எனது அமைச்சுப் பொறுப்பை பறித்து பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில் செயற்படுவதனை என்னால் உணரமுடிகின்றது.
எனக்குத் தெரியாமல் ரகசியமாக என்னை அமைச்சுப்பதவியிலிருந்து நீக்குமாறு முதலமைச்சருக்கு கடிதம் எழுதாமல் என்னோடு நேரடியாக கதைத்திருந்தால் எவ்வித தயக்கமுமின்றி அமைச்சு பதவியினை தங்களுக்கு விட்டுத்தந்திருப்பேன், அனால் தற்பொழுது தாங்களும், முதலமைச்சரும் புறமுதுகு குத்தி என்னை பழிவாங்க வேண்டுமென்று அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்வீர்களாயின் தகுந்த நேரத்தில் எமது மக்கள் தங்களுக்கு தகுந்தபாடம் புகட்டுவார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாங்கள் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டவாறு அதற்கு தக்க பதிலளிக்க வேண்டுமென்று கடந்த 12ஆம் திகதி நேரடியாகவே தங்களின் கூட்டத்திற்கு வந்து தகுந்த பதிலினை தங்கள் எல்லோர் முன்னிலையிலும் தெரிவித்திருந்தேன்.
ஆனால் கட்சியின் யாப்புவிதிகளை கேட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் ஏன் எதற்காக எனக்கு தரவில்லை? என்ற கேள்வியினையும் தற்பொழுது வெளிப்படையாகவே கேட்க விரும்புகின்றேன். அத்தோடு தங்களது கட்சியில் நான் ஒரு அடிப்படை உறுப்புரிமை இல்லாதவன் என்ற வகையிலா அனுப்பிவைக்காமல் இருக்கின்றீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியானது ஜனநாயக ரீதியாக வளர்ந்து வருகின்றபோது வெளிப்படை தன்மையோடும், நேர்மையுடனும் செயற்பட்டாலேயே அக்கட்சியானது மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முடியும். இது தவிர்த்து சிறுபிள்ளைத்தனமாகக் கட்சி நடந்துகொள்ளுமாயின் அக்கட்சியின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பதனையும் மறந்துவிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே எது எவ்வாறு இருப்பினும் சட்ட மற்றும் யாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முறைப்படி என்னை கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்த்துவிட்டு, அதன்பின்னர் தங்களது யாப்பில் பின்னோக்கியாளும் சட்ட ஏற்பாடுகள் காணப்படுமிடத்து, ஆறு மாதங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவதனை விட நிரந்தரமாகவே தங்கள் கட்சியில் இருந்து நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு செய்தால் அதனை முழுமனதோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்பதாகவும் தெரியப்படுத்தியுள்ளதோடு, எவரும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக எதையும் செய்யமுடியாது என்பதோடு, யாவரும் சட்டத்திற்க்குமுன் சமனானவர்கள் என்பதனையும் நினைவில் கொள்ளுமாறு குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.