யாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாணவன் சுலக்ஷன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன், கஜன் விபத்தில் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் கஜன் என்ற மாணவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும் இதுவரை வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என கஜனின் தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த கஜனின் குடும்பத்தினருக்கு வீடு அமைத்து கொடுப்பதாகவும், கல்வி கற்று வீட்டில் உள்ள ஒருவருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடு ஒன்றை பெறுவதற்கு தான் பல்வேறு முயற்சிகள் எடுத்ததாகவும், அதன் மூலம் வீட்டுத்திட்டம் ஒன்று கிடைத்துள்ள போதிலும் வீட்டை கட்டி முடிக்க முடியாது போயுள்ளதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு எவ்வித உதவியும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் எனது பிள்ளையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்