பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனை சந்திரன் மறைக்கும் தன்மைக்கு ஏற்ப, முழுமையாக மறைத்தால் முழு கிரகணம், பகுதியாக மறைத்தால் பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் எனப் பல வகை பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில், இதற்கு முன்பு பிப்ரவரி 26-ம் திகதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. ஆனால், அன்று ஏற்பட்ட சூரியகிரகணத்துக்கும், நேற்று ஏற்பட்ட சூரியகிரகணத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. பிப்ரவரி 26 ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது சூரியனின் மையப்பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கிரகணத்தில், சூரியனை நிலவு முழுவதுமாக மறைக்கிறது.
இதுபோன்ற முழு சூரிய கிரகணம், 1955-ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின் இப்போதுதான் அப்படியான சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் நாசா தெரிவித்திருந்தது. மேலும் ஐரோப்பா, வட கிழக்கு ஆசியா, வட மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக் ஆகியவற்றில் முழுமையாக மற்றும் பகுதியாக சில இடங்களில் தெரியும் என தெரிவிக்கப்பட்டிருந்து.
குறிப்பாக அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் கிரகணக்காட்சி முழுமையாகத் தெரிந்தது. இந்திய நேரப்படி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கிரகணம் நிகழ்ந்தது. இதை, பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால், தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாது.
இருப்பினும், நாசா இணையதளத்தில் வெளியான கிரகணக் காட்சிகள் நேரலையாக பல இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019-ம் ஆண்டு ஜூலை 2-ம் திகதி ஏற்படவுள்ளது.