வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் ஜி.குணசீலனை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
ரெலோ அமைப்பின் சார்பில் விந்தன் கனகரத்தினத்தை அமைச்சராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டு வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம்அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் வைத்தியர் ஜி. குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வடமாகாணசபையில் ஏற்பட்ட குழப்பத்தினையடுத்து கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் இருவரும் பதவி விலகினர். சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோரை முதலமைச்சர் பதவி விலகுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இவ்விருவரும் தாம் பதவி விலகப்போவதில்லையென அறிவித்ததுடன், முதலமைச்சருக்கெதிராக தமிழரசுக் கட்சியினால் முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து பெருங் குழப்பம் ஏற்பட்ட நிலையில், வடமாகாணசபையில் தாம் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப்போவதில்லையென தமிழரசுக் கட்சி அறிவித்ததையடுத்து சுகாதார அமைச்சரும் பதவி விலகல் கடிதத்தினைக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனீஸ்வரன் முதலமைச்சருக்கு எதிராகச் செயற்பட்ட காரணத்தினால் ரெலோ அமைப்பு ஆறு மாதத்திற்கு டெனீஸ்வரனை தமது கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்ததுடன் அப்பதவிக்கு விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறும் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையிலேயே, புளொட் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்து முதலமைச்சர் வைத்தியர் ஜி.குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.