சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வயல் காணிகளை மீளவும் குறித்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவில் மாவட்டத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அனுமதிப்பத்திரம் உள்ள தமது நிலங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 2011ஆம் ஆண்டு மீளவும் தமது பிரதேசங்களில் குடியமர்ந்துள்ளனர். எனினும் தொடர்ச்சியான இடப்பெயர்வின் காரணமாக குறித்த மக்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களும் தொலைக்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்பொழுது 614 ஏக்கர் மானாவாரி வயல் காணிகளுக்குச் சொந்தமான 164 குடும்பங்களுக்கு தொலைந்த உத்தரவுப்பத்திரங்களுக்கு பதிலாக புதிய உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
225 தமிழ் மக்களுக்கு சொந்தமான 835 ஏக்கர் நீர்ப்பாசன வயல் காணிகள் இந்த பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
முன்னர் வழங்கப்பட்ட இந்த காணிகளுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான காணிகளை இழந்த நிலையில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள்.
எனவே வயல் காணிகள் மீளவும் முன்னர் வழங்கப்பட்ட குறித்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தெரிவித்துள்ளார்.