உயிரிழந்த தனது சகோதரனின் பிறந்த நாளுக்கு புதிய ஆடைகள் வாங்கி வைத்து தங்கை ஒருவர் காத்திருக்கும் சோக சம்பவம் லண்டனில் பதிவாகியுள்ளது.
கடந்த வருடம் லண்டன் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்களின் ஒவரின் தங்கையே இவ்வாறு காத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
நாளைய தினம் உயிரிழந்த 5 இளைஞர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினரிடம், சர்வதேச ஊடகம் ஒன்று பேட்டி கண்டது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த 22 வயதுடைய நிதர்ஷன் ரவியின் குடும்பத்தினர் தமது மனக் குமுறுல்களை வெளிப்படுத்தினர்.
சம்பவம் இடம்பெற்ற கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதிகாரிகள், லண்டனிலுள்ள நிதர்ஷனின் வீட்டு கதவை தட்டினர்.
இதன்போது உயிரிழந்த நிதர்ஷனின் வாகன அனுமதி பத்திரத்தை படித்துள்ளனர். அது நிதர்ஷனின் வாகன அனுமதி பத்திரம் என்பதனை குடும்பத்தினர் உறுதி செய்தனர். இதன்போது 5 இளைஞர்கள் கடல் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா? வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்களா என நிதர்ஷனின் 18 வயது சகோதரி மயுரா பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.
அவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்து விட்டனர் என்பதை பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனை கேட்ட மயுரா கதறியழுவதற்கு ஆரம்பித்துள்ளார்.
Southampton பல்கலைக்கழகத்தில் கடல் மார்க்க வல்லுனரான வைத்தியர் Simon Boxall என்பவர், ஐந்து பேர் கரையோரத்திலிருந்து அரை மைல் தொலைவில் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளை குறிப்பிட்டார்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஐவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஐவரும் உயிரிழந்தமை உறுதியாகியது. அவர்கள் இலங்கை முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என மயுரா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஐவரும் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள். அவர்கள் இலங்கையில் ஆரம்ப கல்வி கற்கும் நாட்களில் இருந்தே நீச்சலில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த ஐவரும் முட்டாள்கள். எங்கள் வலி புரியாதென நிதர்ஷனின் தந்தை கதறியழுதுள்ளார்.
எனது ஆன்மா என்னை விட்டு சென்று விட்டது. எனது உடல் மாத்திரமே இங்கு உள்ளதென நிதர்ஷனின் தாயார் தெரிவித்துள்ளார்.
நிதர்ஷனின் தங்கை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 23 வயதையடைந்தார். அவர்களின் குடும்ப விழுமியங்களின்படி பிறந்த நாளின் போது சகோதரனுக்கு ஆடை ஒன்று பரிசளிக்க வேண்டும். அதற்கமைய நிதர்ஷனின் தங்கை நீலநிறத்தில் சட்டை ஒன்றை கொள்வனவு செய்து நிதர்ஷனின் அறையில் வைத்துள்ளார்.
நிதர்ஷனுக்கு பல கனவுகள் உள்ளதாக அவரது சகோதரர் அஜிர்தன் தெரிவித்துள்ளார். கார் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டும். 6 அறைகளை கொண்ட வீடொன்றை கொள்வனவு செய்ய வேண்டும் என கூறி ஒரு வாரத்திற்குள் அவர் உயிரிழந்து விட்டார்.
பெற்றோரை பெருமைபடுத்த வேண்டும். அவர்கள் கஷ்டப்படுவதனை நான் பார்க்க கூடாதென கூறினார். ஒரு வாரத்தில் அவர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என அவரது சகோதரர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக ஐந்து இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 22 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாகும்.