தற்போது அனைவரும் பொதுவாக பேரறிவாளன் பரோல் பற்றி பேசுகின்றார்கள். 26 வருடங்கள் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் தாய், தந்தையை காண வெளியில் வருகின்றார் பேரறிவாளன்.
யார் இவர்? எப்படி சிறை சென்றார்? என்ன நடந்தது கொஞ்சம் தேடி பார்ப்போம்.
1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் திகதி மாலை வேளையில் “விசாரித்து விட்டு காலை அனுப்பி விடுகின்றோம்” என்று கூறி பேரறிவாளனை கூட்டிச் சென்றனர். அந்த இரவு இன்று வரை விடியவே இல்லை…
தனிமை சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் 26 வருடங்களாக அந்த ஒரு விடியலுக்காக காத்திருந்தான்
பேரறிவாளன்….
வேலூர் மாவட்டம் – சோலையார் போட்டையில் ஞானசேகரன், அற்புதம் அம்மாள் என்போருக்கு 1971ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தையாக பிறந்தவரே அ.ஞா. பேரறிவாளன்.
அமைதியான சுபாவம் கொண்டவர், கூச்ச சுபாவம் மிகுந்தவர். ஆசிரியர் நண்பர்களின் பிரியன். அன்பானவன், அறிவானவன், நல்லதொரு இசையமைப்பாளர்.
ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்க தனியாக அமைக்கப்பட்ட அலுவலகமே மல்லிகை புலனாய்வுத்துறை அலுவலகம். இங்குதான் பேரறிவாளனை 10.06.1991 அன்று அழைத்துச் சென்று நளினி யார்? முருகன் யார்? இவர்கள் எங்கே என்று விசாரணைகள் ஆரம்பமாகின.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது அதீத ஈடுபாடு கொண்ட பேரறிவாளன், நளினியைப் பற்றியும், முருகனைப் பற்றியும் எவ்வாறு அறிவார்?
ஜூன் 10 விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட பேரறிவாளன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஜூன் 18ஆம் திகதி வெளிவந்தது.
“தடா சட்டம்” பற்றி அறியாத இவர் தான் அனுபவிக்கும் சித்திரவதைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு அதிகாரிகள் காட்டிய பத்திரங்களில் கையொப்பமிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அன்று அவர் போட்ட கையெழுத்து தான் இன்று அவரது உயிரை விலை பேசியுள்ளது.
1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி தடா சட்டத்தின் மூலம் தண்டித்தது குற்றம் என்ற உச்ச நீதிமன்றம், 19 பேரை விடுதலை செய்தும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அந்த நால்வரில் ஒருவர் தான் பேரறிவாளன். நம்பிக்கை இழந்த நிலையில் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்.
பேரறிவாளன் படித்த படிப்புகளும், பெற்ற சான்றிதழ்களும் ஏராளம், 12ஆம் வகுப்புத் தேர்வில் இவர் பெற்ற மதிப்பெண் 1096.
பேரறிவாளனின் விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தார்கள் மூன்று பெண் சட்டத்தரணிகள். இதைத் தொடர்ந்து எங்கும் கோஷங்கள் முழங்கியது.
உலகிலேயே மரணதண்டனையை எதிர்த்து உயிர்விட்ட முதல் பெண் “செங்கொடி” இவர் தீக்குளித்து பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவியுங்கள் என்ற அதிர்வலைகளை உருவாக்கினார்.
இந்த அதிர்வலைகள் லண்டன், அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் ஒலித்ததென தமிழக சட்டசபையில் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு ஏகமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இவர்களுடைய மரணதண்டனையை 8 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
ராஜிவ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது சி.பி.ஐ அதிகாரியாக தியாகராஜன் பதவி வகித்தார்.
இவர் இந்த சம்பவம் பற்றிக் கூறும் போது ”பற்றரி எதற்காக வாங்கச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாங்கித் தருமாறு கேட்டார்கள், வாங்கிக் கொடுத்தேன். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்பதை பேரறிவாளன் பல தடவைகள் கூறினார். ஆனால் இதை நான் அவருடைய வாக்குமூலத்தில் எழுத மறந்து விட்டேன்” என்று கூறுகின்றார்.
ராஜிவ் கொலை சம்பவத்தில், 1991 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் பற்றரி (மின்கலம்) வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
ஆனால் சிவராசனுக்கும் பொட்டு அம்மனுக்கும் இடையில் நடந்த தொலைபேசி கலந்துரையாடலில் “இந்தக் கொலைத் திட்டம் தானு மற்றும் சுபாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது” என்ற உரை பதிவாகியுள்ளது.
இதனால் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு இந்த கொலை சம்பவம் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஒரு குற்றமற்ற உயிர் தண்டிக்கப்படக் கூடாது, ராஜிவ் காந்தியின் பெயரால் எந்த உயிரையும் எடுத்து விடாதீர்கள், இந்தியாவில் மனிதநேயம் இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள். தண்டிக்கப்பட்டதன் பின் உண்மை வெளிவந்து பயனில்லை. 26 வருடங்கள் போதும் இதற்கு மேலும் தண்டிக்காதீர்கள் என அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், நீதியரசர்களும் வேண்டிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது பேரறிவாளன் தாய் அற்புதம்மாளின் முயற்சியாலும், பலருடைய ஆதரவினாலும் பேரறிவாளனுக்கு 1 மாதம் வெளியில் வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறு வயதில் சிறை சென்ற இவருடைய இளமையை சிறையில் தொலைத்து விட்டார். எஞ்சியிருக்கும் வயதில் தாய், தந்தையுடன் கழிக்க வேண்டும் என்ற கனவோடும், ஆசையோடும் வெளியில் வர காத்திருந்தார் இந்த தமிழன்.
26 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு அடிக்கடி சுகயீனம் ஏற்படும் என தெரிவித்து, பரோல் கோரி அற்புதம்மாள் மனு தாக்கல் செய்திருந்தார். இதன்படி பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்துள்ளது.
இவரின் பரோல் தொடர்பில் தனக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அற்புதம்மாள். இது குறித்த தனக்கு மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
26 வருடங்களுக்குப் பின் வென்ற தாய்ப் பாசத்துடன் பேரறிவாளனை வரவேற்க காத்திருக்கும் அற்புதம்மாள்.