ஊடகவியலாளர் தராகி சிவராமைக் கொன்றது ஊத்தைப் பவான் எனவும் தற்போதிருக்கும் தூள் பவான் இல்லையெனவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்தையடுத்து சர்ச்சை உருவாகியுள்ளது.
தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் தூள் பவான் என அழைக்கப்படும் சிவனேசன் முதலில் அமைச்சர் பதவிகோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியபோது இவர் தராகி சிவராம் படுகொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆகையால் அமைச்சுப் பதவி தரமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து தூள் பவான் என அழைக்கப்படும் விவசாய அமைச்சர் சிவனேசன் முதலமைச்சருக்கு தன்னிலை விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பியதன் பின்னர் தற்போது வடமாகாண விவசாய அமைச்சராக முதலமைச்சரினால்நியமிக்கப்பட்டுள்ளார்.
இநநிலையில், புளொட் அமைப்பில் மூன்று பவான்கள் உள்ளதாகவும், அதில் ஊத்தைப் பவானே தராகி சிவராமைப் படுகொலை செய்ததாகவும், அவர் தற்போது கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றயவர் வளர்ந்த பவான் எனவும், இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு அமைப்பிலிருந்து செயற்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வடமாகாண விவசாய அமைச்சராக இருக்கும் தூள் பவான் எனப்படும் சிவனேசனின் நேரடிக் கண்காணிப்பிலேயே ஊத்தைப் பவான் உட்பட பல புளொட் உறுப்பினர்கள் போர்க்காலத்தில் செயற்பட்டதாகவும், இவருக்குத் தெரியாமலேயே ஊத்தைப் பவான் ஊடகவியலாளர் தராகி சிவராமைப் படுகொலை செய்தார் எனவும் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் ஒரு பொறுப்பு மிக்க அதிகாரிக்குக் கீழ் கடமையாற்றும் உறுப்பினர் ஒருவர் இன்னொருவரைப் படுகொலை செய்யும்போது எவ்வாறு பொறுப்புநிலையில் உள்ள அதிகாரிக்கு குறித்த விடயம் தெரியாமல் போகும் எனவும் அவ்வூடகம் கேள்வி எழுப்பியுள்ளது?