சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்களை ஒரு வருடத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என சிறிலங்காவின் 22ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா சூளுரைத்துள்ளார்.
22ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று காலை அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சிறிலங்காவின் கடலோரப் பாதுகாப்புக்காக பல கப்பல்களை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளோம்.
இக்கப்பல்களைக் கொள்வனவு செய்வதன் நோக்கம் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கேயாகும். இன்னும் ஒரு வருடத்தை எமக்குத் தாருங்கள். கடலினால் நடைபெறும்அனைத்து சட்டவிரோதச் செயல்களையும் கட்டுப்படுத்திக் காட்டுகின்றோம் எனவும் சூளுரைத்தார்.
அத்துடன், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு அவர்களது எல்லை தெரியாததாலேயே எல்லைமீறி மீன் பிடிக்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், மீனவர்களுக்கு அவர்களது கடல் எல்லையைச் சரியாக காண்பிக்கப்போகிறோம்.
அவர்களுக்கு அது தெரியவில்லை. எனவே எமது கடற்பகுதிக்குள் வராதபடி அந்த மீனவர்களின் எல்லையை சரியாக அடையாளம் காண்பிக்க எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.