நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் விருப்பு வாக்கு முறைகள் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவதனால் ஒரே கட்சிக்குள் மோதல் நிகழ்வதற்கு இடமிருக்காது எனவும், பண விரயமும் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமக்குச் சாதகமாக தேர்தல் முறையை மாற்றி அமைத்தது. அத்துடன், சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தது.
விருப்பு வாக்கு முறையினால் பண விரயம் அதிகமாகும். அதனை நீக்கவுள்ளோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள எமது ஆட்சியில், நாம் சிறிய கட்சிகளின் பிரதிநித்துவத்தைப் பாதுகாத்தோம்.
தனி அதிகார ஆணவத்துடன் செயற்படவில்லை.மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முறையாக புதிய தேர்தல் முறைமை அமையும் எனத் தெரிவித்தார்.