அரசாங்க ஊழியர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு காணப்படும் சந்தர்ப்பம் நீக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பான திருத்தங்களை குழுநிலையில் அங்கீகரிக்கும் போது கருத்து வெளியிட்ட போதே இரா.சம்பந்தன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத்திற்குள் அமைந்துள்ள, அரச நிறுவனத்தில் பணி புரிவதை குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு முன்னதாக முடித்துக் கொள்ளாத யாரும், உள்ளூராட்சி மன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்க முடியாது என்ற திருத்தத்தை அரசு முன்வைத்திருந்தது.
எனினும், இதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன திருத்த யோசனை ஒன்றை முன்வைத்தார். இதனால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து தினேஷ் குணவர்தனவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், “நாட்டிலுள்ள அரச ஊழியர்கள் சில அரசியல் உரிமைகளை அனுபவிக்கின்றனர். நிபந்தனைகளுக்கு அமைய அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்றால் அவர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும்.
அதன் பின்னர் அவர்கள் பொது பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால் தங்களது அரச சேவையை கைவிட வேண்டும். ஆகவே, தேர்தலில் போட்டியிட விரும்பும் அரச ஊழியர்களின் அந்த தகுதியை தக்க வைப்பது நியாயமானதை தவிர வேறொன்றுமாகாது.
அதை செய்ய அவர்களுக்கு அனுமதிக்க வேண்டும். இது பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும், தினேஷ் குணவர்தனவின் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் ஆதரித்திருந்தாலும், குறித்த யோசனை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.