இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட 50 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் உட்பட வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 150 பேரின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான சிங்கள வாரப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
நோர்வேயில் இருப்பதாக கூறப்படும் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன், ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கர்தியன் மாணிக்கவாசகர், ஐரோப்பாவுக்கான புலிகளின் தலைவர் விநாயகம் என்ற சேதீபன்பிள்ளை விநாயகமூர்த்தி, புலிகளின் கப்பல் பிரிவின் பிரதானி பொன்னையா ஆனந்தராஜன், ஆயுத விநியோகப்பிரின் இரண்டாம் நிலை தலைவர் அய்யன் உட்பட பலரின் பெயர்கள் சர்வதேச பொலிஸாரின் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருந்துள்ளது.
இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இரண்டு பேர் மாத்திரமே இலங்கை பொலிஸாரால் தேடப்படும் நபர்கள் என சர்வதேச பொலிஸார் தமது பட்டியலில் அறிவித்துள்ளனர்.
இரண்டு கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்த முனியாண்டி தர்மசீலன், நம்பிக்கையை மீறினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் எமில் காந்தன் ஆகிய இருவர் மாத்திரமே இலங்கை பொலிஸாரால் தேடப்படுவதாக சர்வதேச பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சர்வதேச பொலிஸார் முதல் முறையாக தேடப்பட்டு வரும் 150 பேரை பட்டியலில் இருந்து நீக்கியமை இதுவே முதல் முறையாகும்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படுவோர் பட்டியிலில் இருந்து நீக்கியமையானது அவர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாக செயற்படக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக அந்த சிங்கள வாரப் பத்திரிகை கூறியுள்ளது.