சீதனக் கொடுமையால் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் யாழ். மாவட்டம், தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் சீதனத்தை அதிகரித்துத் தரும்படி கேட்டதால் மனமுடைந்த பெண் தன் உயிரை மாய்த்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில், சீதனம் போதாது சீதனத்தை அதிகரித்துத் தர வேண்டும் என்றும், அதிகரித்துத் தராவிட்டால் திருமணம் இடம்பெறாது என்றும் மணமகனின் உறவுகள் திடீரென நேற்று மணமகள் வீட்டாருக்குக் கூறினர் என்று மணமகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
உயிரை மாய்த்த பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அவர் கொழும்பில் வாழ்கிறார். அவரது சகோதரி தென்மராட்சியில் வசிக்கிறார். சகோதரியே இந்தத் திருமணத்தைப் பேசி ஏற்பாடுகள் செய்திருந்தார்.
12 லட்சம் ரூபா சீதனம் என்று பேசி முடிவாகியிருந்தது. அதன் பின்னரே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. திருமணத்துக்கான ஆடை, ஆபரணங்கள் வாங்கப்பட்டன.
திடீரென மணமகனின் உறவினர்கள் சீதனக் காசு போதாது அதிகரிக்க வேண்டும் என்று கூறி விட்டனர். தவறினால் இந்தத் திருமணம் இடம்பெறாது என்றும் எச்சரித்து விட்டனர்.
இந்தச் செய்தி மணமகளின் காதுக்கு எட்டியது. பெற்றோரை இழந்த குறித்த பெண்ணுக்கு சீதனம் உட்பட அனைத்துச் செலவுகளையும் அவரது சகோதரியே ஏற்றுக் கெ◌ாண்டிருந்தார்.
சீதனத் தொகையை அதிகரித்தால் தனது சகோதரிக்கு மேலும் பணக் கஷ்டம் ஏற்படுமே என்று மணமகள் மனஉளைச்சலுக்கு ஆளானார்.‘
குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறிக் குளியலறைக்குள் சென்ற மணப்பெண் நெடுநேரமாகியும் வெளியே வரவில்லை. என்ன ஏது என்று பார்த்த போது. குளியலறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்”’’ என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
சாவகச்சேரிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்படட்டது. பொலிஸார் சடலத்தை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்தனர்.
ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. இன்று விசாரணை தொடரவுள்ளது.
மணமகன் கொழும்பில் வசிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
போருக்குப் பின்னரான காலத்தில் அளவுக்கதிகமான சீதனம் கேட்கும் பழக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.