‘மச்சான் சுடச்சொன்னார் நான் சுட்டேன்’ என நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல்தாரியின் வாக்குமூலம் சிந்திக்கப்படவேண்டிய ஒன்றெனவும், இவ்வார்த்தை வழக்கைத் திசைதிருப்பும் நோக்கில் இன்னொருவரால் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கக்கூடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மனநலப் பிரிவைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
அண்மையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதில் “தனது மைத்துனர் தன்னை சுடு பார்ப்போம் என்றார், சுட்டுவிட்டேன்.” என வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதுவும் ஏதோ ஒரு வகையான தாக்கத்தின் வெளிப்பாடு என எண்ண வேண்டியுள்ளது.
ஆனால். இதை அவருக்கு யாரோ சொல்லிக் கொடுத்து கூறிய கூற்றாகவும் இருந்திருக்கலாம். அவ்வாறு கூறினால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி வழக்கை திசை திருப்ப முடியும் என்றும் எண்ணியிருக்கலாம்.
எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொது மக்களின் பங்களிப்பு, சமூக ஆர்வலர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றின் உரிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.