மக்கள் உங்களை அடித்துக் கொல்லப்போகிறார்கள். நான் உங்களைப் 10 நிமிடத்துக்குள் காப்பாற்றுவேன் எனச் ஸ்ரீகஜன் தெரிவித்ததோடு என்னைத் தனது வாகனத்தில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்சென்றார் என எதிரி தரப்பு சாட்சியாளரான சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புனர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான எதிரி தரப்பு சாட்சியம் நடைபெற்று வருகின்றது.
இவ்வழக்கின் 9ஆவது குற்றவாளியான சுவிஸ்குமார் சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் சாட்சியமளிக்கையில்,
2015மே மாதம் 18ஆம் நாள் ஸ்ரீகஜன் என்பவர் எனது நண்பரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து என்னுடன் கதைக்கவேண்டுமெனத் தெரிவித்தார். அதற்கு நண்பர் நான் புளியங்கூடல் ஆலயத்திலுள்ள தேர்த்திருவிழாவில் நிற்பதாகத் தெரிவித்தார். நான் வந்ததும் அழைப்பேற்படுத்துமாறு ஸ்ரீகஜன் தெரிவித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.
நான் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்ததும் ஸ்ரீகஜனுக்கு அழைப்பெடுத்தேன். அவர் என்னைச் சந்திக்கவேண்டுமெனத் தெரியப்படுத்தியதும், நான் எனதுசகோதரர்களுடன் சென்று அவரைச் சந்தித்தேன். அங்கு வைத்து நான்குபேர் கைதுசெய்யப்பட்டனர். அதற்கு நான் ஏன் அவர்களைக் கைதுசெய்கிறீர்கள் என வினவினேன். அதற்கும் தனக்கும் தொடர்பில்லையெனத் தெரிவித்த ஸ்ரீகஜன் நான் உங்களை வேறு அலுவலாகவே சந்திக்க வந்தேன் எனத் தெரிவித்தார்.
மறுநாள் காலை ஸ்ரீகஜன் எனது வீட்டுக்கு வந்தார். நான் வீட்டிற்குள் இருந்தேன். மனைவியே வெளியில் சென்று கதைத்தார். அவர் என்னுடன்கதைக்கவேண்டுமெனத் தெரிவித்தார். நான் வெளியே வந்தபோது ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றார்கள். உங்களைப் 10 நிமிடத்தில் என்னால் காப்பாற்ற முடியும். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று ஸ்ரீகஜன் தெரிவித்தார். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தமது வாகனம் வருகின்றது என்றும், தன்னுடன் வருமாறும் கூறினார்.
அதற்கமைய நான், மனைவி, மனைவியின் தாயார் ஆகிய மூவரும் அவரது வாகனத்தில் யாழ் காவல்நிலையத்திற்குச் சென்றோம். மனைவியின் தாயாருக்கு கண்ணிற்குக் கீழ் காயமொன்று இருந்தது. அந்தக் காயத்திற்கு முறைப்பாட்டைப் பதிவுசெய்துவிட்டு எங்களைப் போகுமாறு ஸ்ரீகஜன் தெரிவித்தார்.
இதற்கிடையில் எமது படங்கள் இணையத் தளங்களில் வெளிவந்து விட்டன. இந்நிலையில் நான் திரும்பி எமதிடத்திற்கு போகாது கொழும்புக்குச் சென்றேன் என சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்.