வாழ்வின் மடியிலிருந்து சருகுகளாக உதிர்வதை விட, மரணத்தின் பிடியிலிருந்து விதைகளாகச் சிந்தலாம். அனைத்து விடுதலை இயக்கங்களின் பற்றுறுதி இந்த எண்ணம் தான். எந்த நாடும் காணாத ஈகம் சுமந்த இயக்கம் தமழ்ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம். அட்சரேகைகளாகப் படுத்துக் கிடந்த தமிழினத்தைத் தீர்க்க ரேகைகளாக நிமிர்த்திய இயக்கம். 1974 –இல் 15 பேருடன் காட்டுக்கள் சென்ற தம்பி பிரபாகரன் 1987 –இல் வெறும் 13 ஆண்டுகளில் தமிழர்க்கான சுதந்திர தேசக் கட்டுமானத்தை ஏற்படுத்தி படை, நீதி, நிதி, காவல், நிர்வாகம், மக்கள் நலம் முன்னெடுக்கும் செயலமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசாட்சியை நிறுவி, 2009 வரை நகலெடுக்க முடியா நல்லரசை நடத்திக் காட்டிய ஆற்றல் வரலாறு காணாதது. ஒரு சுயேச்சையான தமிழரசினை நிர்மாணித்து, நெறிமுறைகளோடு ஓர் ஆட்சியை ஓர் அமைதிச் சூழலில் நடத்தவில்லை. வல்லாண்மை மிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம், இரக்கமற்ற இஸ்ரேலின் மொசார் படை உதவி, செஞ்சீனத்தின் பொருள், ஆயுதத் துணை, பண்பற்ற பாகிஸ்தானின் பக்கத்துணை, அறமற்ற இந்தியா என்ற அகிம்சை (?) தேசத்தின் ராடார், படைப்பயிற்சி, படைக்கலப் பிச்சை, இந்திய அமைதிப் படையின் நியாயமில்லா செயற்பாடுகள், மாத்தையா, கருணா போன்றோரின் மனச்சான்றுக்கு முரணான துரோகங்கள், சகோதர விடுதலை, இயக்கங்களின் எதிர் நடவடிக்கை, வரதராஜ பெருமாள் போன்றவர்களின் எட்டப்ப முயற்சிகள், முறையான பயிற்சி பெற்ற சிங்கள ராணுவம் ஆகியவற்றை நெஞ்சுரத்தோடு எதிர் கொண்டு தமிழ் ஈழ நல்லரசை நடத்திய வரலாற்று அதிசயம் தம்பி பிரபாகரனால் சாத்தியமாக்கப்பட்டது.
மரணத் தாலியாகச் சயனைடு குப்பிகளை மார்பில் அணிந்து கொண்டு, வாழ்வதும், வீழ்வதும் என தமிழ் ஈழத் தாயகத்திற்காக எனப் பல்லாயிரக்கான இளைஞர்களை பக்குவப்படுத்திய பாசறை விடுதலைப்புலிகள் இயக்கம். . ஈழ தேசத்துப் பனைமரங்கட்கும் விடுதலைப் போரில் பங்கெடுக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆமாம் பனங்காயிலிருந்து கண்ணி வெடி தயாரித்து, நிலத்திலிருந்து சிங்கள வானூர்திகளைத் தாக்கி வீழ்த்தும் ஏவுகணைகள் தயாரித்து, உலங்கு வானூர்தி கண்டு பிடித்து, கரும்புலி, கடற்புலிப் படையணிகளை உருவாக்கி, கரந்தடி கெரில்லாப் போரில் கணக்கற்ற வெற்றிகளை ஈட்டி, நிலப்போராம் களப் போரில் நிகரற்ற வாகைசூடி, மறைவுப் போர் நிகழ்த்த முடியாத கடலின் சமதளத்தில் சமர் நிகழ்த்திச் சரித்திரம் படைத்தது விடுதலைப் புலிகள் இயக்கம். 16 வயதுப் பொடியன் காலத்திலிருந்து தன தலைவனுக்கு இறப்பின் சில நொடிகளுக்கு முன்பு, தன காயத்தின் ரத்தம் தொட்டுக் கடிதம் ஒன்று எழுதினான்.
“தலைவா
களத்தில் ஆயுதமின்றி
நீ
நிராயுதபாணியாக நிற்க நேர்ந்தால்
கவலை படாதே!
என்
கல்லறையைத் தோண்டு!
என்
கபாலத்தைக் கேடயமாக்கிக் கொள்!
என்
கைகால் எலும்புகளை
ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்!
என் எலும்புகளுக்கு
நாட்டுக்காக
இரண்டாம் முறையும்
போராட வாய்ப்புக் கொடு!
தரை நோக்கித் தாழப் பறந்து, தமிழ்ப்பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் மீது கொத்துக் குண்டு மழை பொழிந்து ஒரு சிங்கள ரானுவப் போர் விமானம் வருகிறது. தரையிலிருந்து தமிழ்ப் பெண்புலி ஏவுகணையை அந்த விமானத்தின் நெஞ்சில் எய்கிறாள். தாக்குண்டது விமானம். மார்பில் அடியுண்ட வேகத்தில் அந்த விமானத்தின் இரண்டு இறக்கைகளும் ஒரு சேரக் குவிந்து, இதுதான் தமிழ் வீரம் என இரு கைகளையும் கூப்பிக் கும்பிட்டுக் கொண்டே, வணக்கம் செலுத்தித் தரையில் விழுகிறது. உலக தொலைக் காட்சிகள் இவ்வரிய காட்சியினை ஒளிபரப்புகின்றன. ஈழ தமிழினத்தைக் காக்கும் வாய்ப்பிருந்தும் பதவிகளுக்காக இழிந்த மௌனம் காத்திருந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை எண்ணுகையில், எழுதத் தோன்றுகிறது.
“தமிழ் ஈழத்தில்
புடவை கட்டிய புலிகள்
தமிழ்நாட்டில்
வேட்டி கட்டிய அலிகள்“
போராளிகளின் கருவறையாக விளங்கிய தனக்குவமையில்லாத தமிழினத்தின் தேசியத் தலைவர் தம்பி பிரபாகரனின் போர் முக ஆளுமையை மட்டுமின்றி, நேர்முகம் கண்டு சிலிர்த்த பன்முக ஆற்றலைப் பதிவு செய்திருக்கும் ஆவணமே ஓவியர் புகழேந்தி அவர்களின், “தலைவர் பிரபாகரன்: பன்முக ஆளுமை” என்ற நூல். மின்னல் கீற்றுகளை பறித்துச் சேர்த்து, இடிகளின் மொழிகளில் புயலின் நிறங்களையும் தீட்டும் தூரிகை புகழேந்தியின் கையில் முளைத்திருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளில் சாற்றல் தேவையா? ஒரு தீற்றல் போதும் அதனால் பேச முடியும் என்றதைப் புலப்படுத்தி வருபவர் புகழேந்தி. தமிழ் ஈழ அரசின் ஆஸ்தான ஓவியர்.
1990 ஆம் ஆண்டு கடலில் காவியமாகிய போராளி காந்தரூபன் தன்னைப் போலத் தாய், தந்தையற்ற, போரினால் அனாதைகள் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்காகப் பராமரிப்பு இல்லம் அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற கோப்பாயில் 1993 –இல் தலைவரால் அமைக்கப்பட்டவை செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச் சோலை சிறுவர் இல்லங்கள். போரில் குப்பி கடிக்க முயன்று, காயமுற்றுக் கிடந்த காந்தரூபனைக் காப்பாற்றி, தன துணைவியார் மதிவதனி அவர்களையே செவிலித்தாயாக வழங்கிய ஈரத்தையும், அவருக்கு மாட்டுப்பால் தேவையெனச் சொல்லப்பட்ட போது, நாட்டுக்குள் இருந்து காட்டுக்குள் ஒரு மாட்டினை பகை ராணுவக் கண்களில் மண்ணைத் தூவிக் கொண்டு வந்த தம்பியின் கரிசனையையும் புகழேந்தியார் விளக்கும் இடம் (பக்கம் 18-19) கண்களைக் குளமாக்குகிறது. இந்தத் தடத்தில் அமைக்கப்பட்ட மூதாளர் பேணலகமும் விழிகளைச் சிரபுஞ்சியாக்கிவிடும்.
2004 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம். சோலைச் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளில் விளையாட்டுப் பொருள் பரிசுப் பொருள் வழங்கல், வான வேடிக்கை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இரவில் புலிப் போராளிகள் இருக்குமிடம் தெரிந்து விட்டால், எதிரிகள் தாக்க எதுவாகி விடும் என்ற எண்ணத்தில் வாணவேடிகையைப் பொறுப்பாளர்கள் தவிர்க்கிறார்கள். உடனே தலைவர் பிரபாகரன் வாணவேடிக்கை நிகழ்த்தச் சொல்கிறார். தொடர்ந்து
“இந்த வாணவேடிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் பார்த்து ஒவ்வொரு
பிள்ளையளும் படும் சந்தோசத்திற்கு ஈடிணை வேறொன்றுமில்லை
இதை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க முடியாது“ (பக்கம் 25).
என்று உருகிச் சொல்கிறார். பிள்ளைகள் கன்னங்களை விடவும் அலைபேசிகளின் தொடுதிரைகளையே அதிகம் தடவும் தாய்மார்கள் இருக்கும் உலகில் இரக்கச் சுரபியாகி எதிலிக் குழந்தைகளின் மகிழ்வே முக்கியம் என்று தலைவர் கொண்டாடும் காரணத்தால் தான் அச்சிறுவர்கள் தங்களைத் ‘தலைவர் மாமா பிள்ளைகள்’ என்று நெஞ்சுயர்த்திக் கூறுவதைப் புகழேந்தியார் சுட்டிக் காட்டும் நிகழ்வு நெகிழ்வாகி விடுகிறது. திருச்சியில் அனாதைப் பிள்ளைகளுக்காகத் தந்தை பெரியார் ஒரு விடுதி தொடங்கினார். அந்தப் பிள்ளைகள் அனைவருக்கும் தலையெழுத்து (INITIAL) ‘ஈ.வே.ரா’ என்றிருந்ததை இங்கு நினைவுபடுத்திப் பார்க்கையில் தந்தை வழியில் தனயன் என்பது வெளிப்படுகிறது.
‘தமிழ் ஈழக் கடற்படை’ என்ற நூல்பகுதி கண்ணி வெடிகளோடு கடலில் நீந்திக் காவியமான அங்கயற்கண்ணி, தாக்கி விட்டு, அதிசயமாகத் தப்பிய செவ்வானம் முதலான கடற்பெண்புலிகளைப் பற்றி நூலாசிரியர் வழங்கியுள்ள செய்திகள் புளகமூட்டுபவை.
ஸ்பெயின் தேசத்து வீரன் ஜிப்ரால்டர் தளபதி தாரித், இத்தாலிய சர்வாதிகாரி முசொலினியால் அடிமைப்பட்ட தன் நாட்டை விடுவிக்க, நாட்டை விட்டு வெளியேறித் தன்னாட்டு இளைஞர்களைக் கொண்டு ஒரு படையணி அமைத்து, தன் நாட்டு கடற்கரையில் தன் கப்பல்களோடு வந்து, தன் வீரர்களைத் தரையிறக்கம் செய்து அணிவகுத்து நிற்கச் சொல்கிறான். முன்னே இருக்கும் எதிரிகளின் நிலைகளின் மீது குண்டு மாரிப் பொழிய இருந்த தன் பீரங்கிப்படை வீரர்களை நோக்கிச் சொல்கிறான் “வீரர்களே எதிரிகளின் நிலைகளை நோக்கியல்ல, உங்களுக்குப் பின்னே கடலில் அணிவகுத்து நிற்கும் கப்பல்களை நோக்கி, நம்மைச் சுமந்து வந்து நம் நாட்டுக் கரையில் நாம் கால் வைக்கக் காரணமான கப்பல்களை நோக்கிப் பீரங்கிகளைத் திருப்புங்கள். சுடுங்கள். எதிரிகளுக்குப் பயந்து மீண்டும் கப்பலுக்குத் திரும்பி தப்பிப் பயணப்படலாம் என்று எண்ணாதீர். மாறாக, நம் கப்பல்களை சுக்கு நூறாக்கி விட்டு, எதிரிகளை நோக்கிச் சுடத் தொடங்குங்கள். “ஒன்று, வெற்றி அல்லது வீரமரணம்” என்று முழங்குகிறான். நாட்டை மீட்கிறான்.
வரலாற்றில் சிலிர்ப்பூட்டும் இந்தச் செய்தியைத் தன வீரர்களுக்குத் தலைவர் பிரபாகரன் தெரிவித்ததையும், அதில் ஒரு திருத்தம் செய்ததையும் நூலாசிரியர் தந்திருக்கும் நேர்த்தி சிறப்பானது (பக்கம் 75). இரண்டாம் உலகப் போர்ச்சூழலில் தரையிறக்கம் செய்யப்பட்ட வீரர்களுக்கு அந்தத் தளபதி தாரிக் சொன்னதற்கு மாற்றமாகத் தலைவர் பிரபாகரன் “நாம் ஏறி வந்த படகுகளை அழிக்கச் சொல்லமாட்டேன். உறுதியாக வெற்றி நமது என்பதில் திரும்பிப் போக படகு இருக்க வேண்டுமல்லவா? அதனால் எதிரிகளை நோக்கித் தாக்க முன்னேறுங்கள்” என்று கட்டளையிட்டதைச் சான்றாகக் காட்டித் தலைவர் பிரபாகரனின் பூட்கை மறம் எத்தகையது என்பதை எடுத்துக் காட்டுகிறார்.
‘உரிமைப் போரின் நியாயத் தன்மை’ (பக்கம் 128) என்ற பகுதியில் போராளிகளுக்கும், பயங்கரவாதிகளுக்குமான வேறுபாடுகள் தலைவர் பிரபாகரன் பார்வை வழி நின்று பேசப்படுகிறது. இருவரும் ஆயுதம் எடுக்கிறார்கள். என்ன வேறுபாடு? அரச பயங்கரவாதத்தின் வன்முறைக்கு எதிராகப் போராளிகள் மேற்கொள்ளும் ஆயுதப் பிரயோகம் எதிர்வினையாகும். தேனீர் கூட்டைத் தீவைத்துக் கலைத்துத் தேனை அடைய முயல்பவர்களைத் தேனீக்கள் கொட்டினால் அது தீவிரவாதமா? பகத்சிங்கிற்கும், கோட்சேவிற்கும் உள்ள வித்தியாசம் தமக்குத் தெரியும் என்பது போன்ற தலைவரின் கூற்றுக்கள், தம்பி பிரபாகரனின் தெளிந்த கண்ணோட்டத்திற்குச் சாய்க்க முடியாச் சான்றாகும்.
போராளிகளுக்கான ஓவியப் பயிற்சி பற்றித் தலைவரோடு நூலாசிரியர் கலந்துரையாடும் போது, தம்பி பிரபாகரன் “அறிவியல் உட்பட அனைத்துத் துறைகளும் பயில்வதற்கு ஓவியப் பயிற்சி அடிப்படை. லியனார்டோ டாவின்சி என்ற ஓவியரின் கீறல் ஓவியம் தான், லியனார்டோ டாவின்சி என்ற அறிவியல் அறிஞர் ஹெலிகாப்டர் உருவாக்கத்திற்கு உதவியது” (பக்கம் 168) என்று குறிப்பிட்டுப் பேசும் செய்திகள் பாராட்டிற்கும், பயன்பாட்டிற்கும் உரியன. தன்னாட்டு மக்கள் கலை, இலக்கியம், திரைப்படம், இசை, ஆங்கிலம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் பெறுவதற்காக அந்தத் துறை விற்பன்னர்களைத் தமிழகத்திலிருந்து தமிழ் ஈழத்திற்குக் கொண்டு வந்து, போராளிகளுக்கும், மக்களுக்கும் பயிற்சி கொடுக்க, தலைவர் ஆணைக்கேற்ப நூலாசிரியர் திரை இயக்குனர் மகேந்திரன் அவர்களையும், சிற்பி கன்னியப்பன் அவர்களையும், அவர்கள் குழுவினரையும் அழைத்து வந்து, ஓவியக் கண்காட்சிகள், பயிலரங்குகள், குறும்படங்கள், மாவீரர்களின் சிலையமைப்பு ஆகியவை அமையப் புகழேந்தியார் ஆற்றிய பணிகள் காலம் கடந்து நிற்பவை.
குடும்பத்தோடு போர்ச்சூழல் நாட்டிற்குச் சென்று ஒவியப்பணியோடு, போராளிகட்குப் பயிற்சியும் அளித்ததை அங்குள்ள போராளிகள்
“இந்த மண்ணில் பிறந்து புலம் பெயர்ந்து வாழ்கின்ற பலர், சமாதானக் காலத்தில் கூட, தங்கள் குடும்பத்தை இங்கு அழைத்து வர அஞ்சுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது என்பது எங்களுக்கு ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது” (பக்கம் 163) என்று பாராட்டி நன்றி தெரிவித்திருப்பது புகழேந்திக்குக் கிடைத்த புகழ் மகுடமாகும்.
‘புயலின் நிறங்கள்’ என்ற நம் ஓவியரின் நூல் அச்சிடும் பணி எந்த அளவில் இருக்கிறது என விசாரிக்க ஓவியர் பணிநடந்த அச்சகம் செல்கிறார். அதற்குப் பொறுப்பேற்றிருந்த ஆண்டனி உட்பட யாரும் அங்கு இல்லை. காரணம் கேட்டால் கந்தர் சஷ்டி விரதம் என்றார்கள். அதுபற்றி தமிழ் ஈழ அரசியற் துறைப் பொறுப்பாளர், ஈகர் சுப. தமிழ்ச்செல்வன் கேட்ட பொது, ஓவியர் புகழேந்தி,
“எங்களுக்குத் தேவை ஒரு பிரபாகரன்.
உங்களுக்குத் தேவை ஒரு பெரியார்“ (பக்கம் 228)
என்கிறார். தூரிகை ஒன்று துவக்காக மாறி விட்டது போன்று அந்த இடம் படிக்கையில் எனக்குத் தோன்றியது.
ஈழ வரலாறு, போர்ச் சரித்திரம், தமிழக அரசியல் சூழல், போராளிகளான சேகுவேரா, காஸ்ட்ரோ ஆகியோர் பின்னணியில் தமிழ் ஈழ அரசின் செயல்பாடுகளை புகழ் துல்லியமாகத் தந்துள்ளார். களப் போராளிகளான சுப. தமிழ்ச்செல்வன், அவர்கள் துணைவியார் சசி, ஆற்றல் சிகரம் பேபி சுப்பிரமணியம் ஆகியவர்களின் சந்திப்பும், தலைவரோடு குடும்பத்துடன் கழித்த நொடிகளையும் ஓவியர் காவியமாக்கியுள்ளார். ஊர்ப் பொதுக்குளத்தில் அதியமானின் பட்டது யானை படுத்து நீராடும் வேளையில் ஊர்ச்சிறுவர்கள் அச்சமின்றி அதன்மேல் ஏறி விளையாடிய காட்சியை புறநானூற்றில் படிய ஒளவையார் போரில் எதிரிகள் அஞ்சியோடக் களமாடும் களிறு, குழந்தைகளோடு, குழந்தைகளாக விளையாடுவது விந்தை” என்று பாடுகிறார். தலைவர் பிரபாகரன் ஓவியரின் பிள்ளைகள் சித்திரன், இலக்கியனோடு உரையாடி, உறவாடியத்தை எழுதி, இலக்கியனைக் கொஞ்சியதையும், இதனைப் போலவே செஞ்சோலை, அறிவுச்சோலைச் சிறுவர்கள் தலைவரோடு விளையாடுவதையும் ஓவியர் பதிவு செய்திருக்கும் இடங்களைப் படிக்கும் போது வீரவாளுறையில் ஈர மலர்களை இட்டு நிரப்பியதைப் போலத் தோன்றியது. ஓவியர் அவ்விடங்களில் ஆண் ஒளவையாகவே காட்சியளிக்கிறார். நூலை எச்சில் தொட்ட விரல்களால் அல்ல. இமை தொட்ட ஈர விரல்களால்தான் புரட்ட முடியும். நூலின் ஒவ்வொரு வரியும் பதுங்கு குழிகளைப் போலத்தான். அதில் பதுங்கியிருப்பவை புலிக்குட்டிகள் என்பதை வருங்காலம் உணர்த்தும்.