ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் முருகன்.
இவரது உறவினர் தேன்மொழி சென்னை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரொபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரான, என்னுடைய உறவினர் முருகன், ஜீவசமாதி அடைய தனக்கு அனுமதி கேட்டு தமிழக முதலமைச்சர், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளார்.
கடந்த 18-ந்தேதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார்.
இதனால் அவருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை சிறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
அதேநேரம், முருகன் ஜீவசமாதி அடைவதை சிறைத்துறை அதிகாரிகள் தடுக்கவில்லை.
இதனால், முருகனை நேரில் சந்தித்து, அவரது முடிவை மாற்ற வேண்டும் என்று சொல்வதற்காக சிறைக்கு சென்றேன். ஆனால், முருகனை சந்திக்க எனக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
சிறைக் கைதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை சிறைத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.
எனவே, முருகனை சந்திக்க எனக்கு அனுமதி வழங்க வேண்டும். முருகனின் உயிரை காப்பாற்றத் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது முருகன் தற்போது எப்படி உள்ளார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு வக்கீல், ‘அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது’ என்றார்.‘
அப்படி இருக்கும் போது, முருகனை சந்திக்க மனுதாரருக்கு அனுமதி வழங்கினால் என்ன?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு வக்கீல், முருகன் பேசும் நிலையில் இல்லை. அதனால், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து, முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தனர்.