வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை வீசி பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார தடையும் விதித்தன. அதை கண்டு கொள்ளாத வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், வடகொரியா நேற்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் பறந்தது. ஜப்பானில் வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா அகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ரஷியாவும் இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தது.
அந்த ஏவுகணை சோதனை தொடர்பாக வடகொரியா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஹூவாசோங் -12 என்ற பெயரிடப்பட்டுள்ள மத்தியதூர ஏவுகணையை வடகொரியா செலுத்தியதாகவும், அதனை அதிபர் கிம் ஜாங்-உன் கண்காணித்ததாகவும் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. மேலும் அந்த ஏவுகணை ஹோக்கைடோவின் ஓஷிமா தீபகற்பம், எரிமோ முனை ஆகிய இடங்களை கடந்து தடம் மாறாமல் வடக்கு பசிபிக்கின் இலக்கை துல்லியமாக தாக்கியது எனவும் கூறியுள்ளது.