யார்…? இவன்.
யாரிடம் கேட்பேன் யார்? இவன் என்று
களமாடி ஓய்வெடுத்த போர் வீரனா- இல்லை
கயவனின் குண்டில் காலமான பொதுமகனா ?
தாயக மண்ணில் சரிந்து கிடக்கும் இவன் தேகம்
எதிரியுடன் நேர் நின்று போரிட்ட புலியில்லை- ஏன்எனில்
காட்சியில் காண்பது களமுனை அல்ல
தன்னுயிர் காக்க தரப்பால் கொட்டகைக்குள்
தஞ்சம் புகுந்த இருப்பிடத்தின் காட்சிகளே.
சக்கர நாட்காலியும் தன்னருகில்
அதன் உதிரிப் பாகங்களும் உடல் அருகில்
எழுதவா முடிகிறது இவன் நிலையை
ஊர் ஊராய் சாட்சிகள் தேடும் மானிடனே
எரிந்து கிடக்கும் தரப்பால் கொட்டகைக்குள்
ஒளிந்து கிடக்கு ஓராயிரம் சாட்சிகள்
குடியிருப்பு மீதும் குழந்தைகள் மீதும்
குண்டுகள் ஏவவில்லை எக்கணமும்
கொக்கெரித்த அரக்கருக்கு
சாட்சிகளாக சரிந்து கிடக்கும் இவன் உடலும்.
முடிவுற்று போனதே கொடியவனின் குண்டினால்
சக்கரத்தில் தொடர்ந்த இவன் வாழ்வும்
சரித்திரத்தில் சாட்சியாக படமாக்கியது எவர் கண்ணோ
சிதையுண்டு கிடக்கும் இவ் சித்திரத்தில்
சாதனை படைக்கிறது சக்கர நாட்காலி
சரிந்து கிடக்கும் சரிதத்தை
எத்தனை எத்தனை ஆண்டுகள் தாங்கி நின்றதோ?
மரம் செடி கொடியே மாய்ந்தவன் யாரென்று
அடையாளம் காட்டு அலரி மரமே
குடி போதையில் ஆடைகள் அகலவில்லை
மதி மறந்து நடு வெயிலில்
மாயங்கள் செய்யும் சித்தனும் இல்லை
பின்னிப் பிணைந்து கிடக்கும் இவன் கால்கள்
எண்ணி நடந்த நாட்கள் எத்தனையோ
அங்கங்கள் தளர்ந்து தொடர்ந்த இவன் பயணம்
அடையாளம் தருகிறது அசையாமல் கிடக்கும் இவன் பாதம்
வானத்தை பார்த்து வாடிக் கிடக்கும்
சுவாசத்தை இழந்த தேசத்தின் சொந்தமே
சுவடுகளாகிப் போனது எம்மினம்
கண் திறந்து பாருங்கள் மனிதநேயம் கூறுவோரே?
மனம் திறந்து பேசுங்கள் ஞானம் உள்ள ஞானிகளே
பரந்து கிடடக்கிறது சோகத்தின் சுவடுகள்
மாய்ந்து கிடப்பது மறத்தமிழன்
உயிர்ப்பித்து இருக்கும் மரம் செடியே
உதவுவீரோ யார்? இவன் என்று இனம் காண.
உயிர்ப்பூடன்
– தரணி