அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒன்றிணைந்தன. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். அத்துடன் அமைச்சரவையிலும் மாற்றம் செய்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த 21ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.