மியன்மாரின் ரொஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில். ரகினே மாநிலத்தில் குறைந்தது 10 பகுதிகளில் பரந்த அளவில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்மதி புகைப்படங்களை மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தீமூட்டிய சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மதீப்பிட்டை பெறுவதற்கு மியன்மார் அரசு சுயாதீன கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 100 கிலோமீற்றர் பகுதியை தீ வைத்து அழித்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016 ஒக்டோபரில் ரொஹிங்கிய போராளிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதலின்போது தீ மூட்டப்பட்ட பகுதியை விடவும் இது பாரியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்மதி ஊடே இந்த தரவுகளை பெற்றிருக்கும் மனித உரிமை கண்காணிப்புக் குழு இதனால் 1,500 வீடுகள் வரை அழிக்கப்பட்டிருப்பதாக கணித்துள்ளது.
இதேவேளை, மியன்மாரில் ரொஹிங்கியாக்களை இலக்கு வைத்து 2016 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் சுமார் 87,000 அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.