கடவுள் என்வசம்
குற்றங்களற்ற
எண்ணங்களுக்கு
சொந்தக்காரன் நீ
உன்னை நேசிக்க
நான் தொடங்கிய
பொழுதுகளில்
இன்னலும் பிணியும்
இயல்தரும் துன்பமும்
என்னை விட்டு அகல்வதை
கண்டேன்
குற்றமும் சுற்றமும்
நன்மையையும் தீமையும்
உன் அகராதி தத்துவம்
என்றேன்
சாத்திரங்களை நான்
மதிப்பதில்லை
சம்பிரதாயங்களையும் நான்
நினைப்பதும் இல்லை
ஆனாலும் துரோகம்
செய்யாத மனதினையும்
உதவிட துடிக்கும்
உள்ளத்தையும்
கறைபடியா கரங்களையும்
எனக்காக நீ படைத்திட்ட
அந்த நொடிகளுக்கு
நன்றிகள் இறைவா
நான் கலங்கும்
பொழுதுகளில்
நிலாக்கால மேகமாய்
என்னை அணைத்துக்கொள்வாய்
நான் புலம்பிடும் வேளைகளில்
என் தாயின்
மடியாய் மாறிடுவாய்
சோகம் என்னை தாலாட்டும்
போதில் தென்றலாய்
என்னில் வீசிடுவாய்
உலக இயக்கத்துக்கு
சொந்தக்காரனே
எனக்கு மட்டுமே நீ வேண்டும்
என்ற என் சுயநலத்தை
ஏற்றுக்கொண்டே நான்
விழுந்திடும் போதினிலே
என்னை தாங்குகின்றாய்
என் மனதுக்குள்
வாழும் ஒளிவிளக்கு நீ
உன் அன்பிற்கு எப்போதும்
நான் அடிமை
கடவுளே நீ என் வசம்
என்னை விட்டு நீ
விலகிட முடியாது இதுவே
என் குணம்