ஆயிரம் மூன்றுகள் கடந்தும்
நகரும் நாட்களில் அவளின்
ஆறாத மனக் காயங்கள் புரை
பிடித்து மணக்கிறது
மருந்திடவும் முடியவில்லை
மனமிரங்கவும் யாருமில்லை
காலம் கன்றாவியாகி விட்டதென்ற
கணிப்பு மட்டும் மிஞ்சிக்கிடக்கிறது
கட்டிய தாலி கழுத்தில்
காலங்கள் நிறைந்து கனக்கிறது
கணவன் வாசம் எங்கோ
மூலையில் பசுமையாய் கிடக்கிறது
தினமும் நுகரப்படும் சுவாசக் காற்றில்
பரவி வரும் அவன் நினைவுகளை
விழி நீரில் அபிசேகம் செய்யும் அவளின்
காலம் நகர்ந்து கொண்டே செல்கிறது
அவளின் தொப்புள் கொடியில்
பிரிக்கப்பட்ட பிள்ளை
காடையர் கரங்களில்
காணாமலே போய் கன நாள் ஆகிறது
அவளுக்கு என்ன செய்ய முடியும்
பறக்கும் பட்டாம் பூச்சிகளுக்குள்
பாசறை அமைத்து பாடலிசைத்த
அந்த பூங்குருவி இன்று தவிக்கிறது
இப்போதெல்லாம் அவளை சுற்றி
பட்டாம் பூச்சிகள் பறப்பதில்லை
பூங்காற்று வீசுவதில்லை
நெல்லரிசி கூட செரிப்பதில்லை
ஆயிரம் ஆயிரமாய் எத்தனை
கடந்தாலும் அவளுக்கு மீண்டும்
புன்னகை பூக்கப் போவதில்லை
கண்கள் குளிரப்போவதில்லை
அவளுக்குத் தெரியும்
கரடிகள் நிறைந்த காட்டுக்குள்
தான் மட்டுமே ஒருத்தியாய்
நிமிர்ந்து நிற்க வேண்டும்
அவள் நிற்பாள்
ஏனெனில் அவள் வாழ்ந்த
பூஞ்சோலையில் முட்களை
நீக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார்கள்
இப்போதெல்லாம் அவளுக்கு
நினைவெல்லாம் நிறைவது
காய்ந்து போன பூக்களாய் வீழ்ந்தாலும்
ஈன்ற மரத்துக்கே உரமாகுவாள்
நடு வீதியும் நாய் பாச்சலும்
வீடுகளற்ற விதி எழுத்தும்
நிலை என்று ஆன பின்பு
நல்லாட்சி அவளுக்கெதுக்கு
இனி அவள் அவளாகவே இருப்பாள்
பதாகைகள் இனி தேவையில்லை
மகாபாரத துரியன்கள் வாழும்
தேசத்தின் நிலை அவளுக்கு புரிந்திருக்கும்
மூலையில் கிடந்து சிரிக்கும்
அவற்றை பார்த்து புன்னகைக்கிறாள்
தனக்காக வாழ்ந்த பதாதைகளை
தொட்டு கொள்கிறாள் இறுதியாக
கவிமகன்.இ
காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் அவருக்காக ஒரு கவி