ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய விசாரணை தொடர்பாக பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை இரு வாரங்களுக்கு உச்ச நீதி மன்றம் தள்ளி வைத்தது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் சிலருக்கான தொடர்பு குறித்து கண்டறிவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்டு பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையை 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அமைத்தது.
இந்த முகமை, விசாரணையின் முன்னேற்றம் குறித்து ரகசிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு(தடா) நீதிமன்றில் தாக்கல் செய்து வருகிறது.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது பரோல் விடுமுறையில் உள்ள பேரறிவாளன் சார்பில் உச்ச நீதி மன்றம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ‘சிறையில் வாடும் என்னையும் தொடர்பு படுத்தி இந்த முகமை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் என்னதான் கூறப்பட்டு உள்ளது என்ற தகவல் இன்றி முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 23-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் நகல் ஒன்றை ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதி மன்றம் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரறிவாளன் தரப்பில், இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வக்கீல் சொந்த அலுவல் காரணமாக ஆஜராக முடியவில்லை என்றும் தங்கள் தரப்புக்கு இரு வாரகாலம் அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை இருவாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.