ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் திகதி அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 70 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‘விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்’ கடந்த 1996-ல் கையெழுத்தாகி கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னமும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.
இனிமேல் அணு ஆயுத சோதனை நடத்தப்படக்கூடாது. அதற்கு அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வர வேண்டும். சீனா, எகிப்து, ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அதனை அமல்படுத்த சம்மதம் தெரிவிக்கவில்லை. வடகொரியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
அனைத்து நாடுகளும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை அமல் செய்ய வேண்டும். இதன்மூலம் சட்டபூர்வமாக அணு ஆயுத சோதனை தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.