முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவரது கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தில் அவரை நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து தனித்து இருவரும் சுமார் 45 நிமிட நேரம் மந்திர ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரையாடலின் முடிவின் போது மகிந்தவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவும் வந்து சந்திப்பில் கலந்து கொண்டு சம்பந்தனிடம் குசலம் விசாரித்து அவருடன் சற்று நேரம் உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்புக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்து வெளியிட்டுகையில்,
இது நல்ல சந்திப்பு. பரஸ்பரம் கருத்துப் பரிமாறினோம். அவரது அழைப்பின் பேரில் இது நிகழ்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இதற்கான ஏற்பாடுகள் இருந்தன. இப்போதுதான் சந்திப்பு சாத்தியமாயிற்று. பல விடயங்கள் குறித்துப் பேசியதாகவும் கூறியுள்ளார்.
தற்போதைய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்து நான் எடுத்துரைத்தேன். ஒருமித்த நாட்டுக்குள் பிரிக்கப்பட முடியாத ஒரு நாட்டுக்குள் நாம் ஐக்கியமாக வாழ்வதற்கான அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்துவதே இந்தப் புதிய அரசமைப்பின் நோக்கமாகும்.
அதில் அனைத்து மக்களினதும் பங்களிப்பு அவசியம். எல்லா மக்களினதும் பங்களிப்போடு அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய ஓர் அரசமைப்பை உருவாக்குவோம் என்றால்தான் அது நின்று, நிலைத்து, நீடிக்க முடியும்.
இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசமைப்பு எதுவும் இந்த நாட்டின் அனைத்து மக்களினாலும் உருவாக்கப்பட்டவை அல்ல.
ஆகவே, அனைத்து மக்களினதும் பங்களிப்போடு இணக்கமான ஓர் அரசமைப்பை உருவாக்கும் இந்த முயற்சியில் சிறுபான்மை இனத்தவரான தமிழர்களாகிய நாங்கள் முழு அளவில் பங்களிப்பதற்கு முன்வந்திருக்கின்றோம்.
இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்தி, சகலரினதும் பங்களிப்போடு இணக்கமான ஓர் அரசமைப்பை உருவாக்கும் இந்த முயற்சியில் தமிழர்களாகிய நாங்கள் முழு அளவில் பங்களிப்பதற்கு முன்வந்திருக்கின்றோம்.
இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்தி, சகலரினதும் பங்களிப்போடு கூடிய ஓர் அரசமைப்பை உருவாக்குவதில் நாட்டின் தேசிய தலைவர்களுள் ஒருவர் என்ற முறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உள்ள பொறுப்பை, கடமையை, பங்களிப்பு அவசியத்தை நான் அவருக்கு எடுத்துரைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.
எனினும், அவருக்கும் அரசியல் ரீதியாக சில, பல பிரச்சினைகள், சங்கடங்கள் உள்ளன. அவரது தரப்பிலும் சில கருத்து நிலைப்பாடுகள் உண்டு. அவை பற்றி அவர் விளக்கினார்.
அந்தச் சந்தேகங்கள், பின்னடைவுகள், நெருக்கடிகளைத் தாண்டி, இந்தப் புதிய அரசமைப்பு விவகாரத்தை நகர்த்தும் தந்திரோபாயம் குறித்து ஆரம்ப நிலைப் பேச்சுக்களை நடத்தியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
இது மேலும் தொடரும். அடுத்த மட்டத் தலைவர்கள் மத்தியில் அடுத்த கட்டப் பேச்சுக்களை நகர்த்தக் கூடியதாக இருக்கும் எனக் கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.