வறட்சியினால் 26 ஆயிரத்து 703 குடும்பங்கள் பாதிப்படைந்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சி நிலை குறித்து அவர் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவுகின்ற கடுமையான வறட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, விவசாயம், நன்னீர் மீன்பிடி, சிறு கடற்தொழில், என்பன பாதிக்கப்பட்டதுடன், பலர் வாழ்வாதாரத் தொழில்களையும் இழந்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 26 ஆயிரத்து 703 குடும்பங்களைச் சேர்ந்த 91 ஆயிரத்து 243 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தற்போது 42 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள ஐயாயிரத்து 171 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 809 பேருக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக எட்டு பவுசர்களும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினூடாக 6 பவுசர்களும் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் உலருணவு விநியோகங்களுக்காக 79.222 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
குறித்த நிதியினூடாக மற்றும் உலருணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை விட இன்னும் 29.042 மில்லியன் ரூபா நிதி மேலும் தேவைப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது