மியன்மார் பௌத்த துறவிகளின் முன்பாக, தன் உயிரைப் பாதுகாக்க மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு ரோஹிங்ய குழந்தையின் புகைப்படம் அந்தத் துறவிகளின் இன அழிப்பு வெறியையும் ரோஹிங்ய மக்களின் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட வாழ்க்கையையும் இந்த உலகின் பாராமுகத்தையும் காட்டுகிறது. இதைப்போலலே அண்மைய நாட்களில் ஆற்றில் எறியப்பட்ட ரோஹிங்ய பெண் குழந்தையின் படமும் ஆசிய நாடுகளை உலுக்கியது. கடந்த 2014 முதல் அங்கு நடைபெற்று வரும் இன அழிப்பின் தொடர்ச்சியே இப் படங்கள்.
அய்லான் குர்தி என்ற சிரிய சிறுவனுக்கு ஆதரவாக எழுந்த மேற்கின் குரல்கள் இச் சிறுவர்கள் விடயத்தில் எழவில்லை என்பது தற்செயலானதல்ல. ஈழத் தமிழர்கள்மீதான பாராமுகம் போன்ற திட்டமிட்ட செயற்பாடே. இலங்கைத் தீவில் ஈழ தமிழ் மக்களை அறுபது வருடங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாதம் ஒடுக்கிவருகிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப் பெரிய இனப்படுகொலையை சிங்கள பௌத்த பேரினவாதம் ஈழவர் மீது நிகழ்த்தி ஆறாவது ஆண்டில் மியன்மார் நாட்டில் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக ஓர் திட்டமிட்ட இன அழிப்பு பௌத்த பேரினவாதம் முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது.
கருணையை, துறவறத்தை போதிக்கும் புத்த மதத்திற்கு முற்றிலும் மாறாக உயிர்களை அழிக்கவும் நிலங்களை அபரிக்கவும் அதிகாரங்களை உருசிக்கவும் இனங்களை வேட்டையாடி அழிக்கும் மியன்மார் பௌத்தர்களும் சிங்கள பௌத்தர்களும் போலி பௌத்தர்களே. மதத்தின் – இனத்தின் பெயரால் வெறிகொண்டு அப்பாவி மக்களை அழிப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
ஈழ மக்கள் கொன்றழிக்கப்பட்டது போல பர்மிய ரோஹிங்ய மக்களும் கொத்துக் கொத்தாக அழிக்கப்படுகின்ற இனப்படுகொலை கொடூரம் நிகழ்வதற்கு இந்த உலகத்தின் பாராமுகமே காரணம். இந்த உலகம் எல்லா இனப்படுகொலைகளும் நடந்தேறிய பின்னர் அதற்காக வருத்தம் தெரிவிப்பதையும் அதை வைத்து தன் அரசியல் நலன்களை சாதிப்பதையுமே வழக்காக கொண்டுள்ளது.
ருவாண்டா இனப்படுகொலைகளுக்கு இன்று வருத்தம் தெரிவிக்கும் ஐ.நா. அன்று அதை தடுக்கத் தவறியது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இன்று வருத்தம் தெரிவிக்கும் ஐ.நா ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அதை தடுக்கத் தவறியது. ரோஹிங்யா மக்கள் அவர்களின் தாய் நிலத்திலிருந்து அழிக்கப்பட்டதன் பின்னர் வருத்தம் தெரிவிக்க ஐ.நா காத்திருக்கிறதா? இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் இரக்கமற்ற – மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு ஐ.நா துணைபோகிறது.
சுமார் 1.3 மில்லியன் எண்ணிக்கை கொண்ட ரோஹிங்யா மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். நாடுகள் பிரிப்பின்போது நாடற்றவர்களாக்கட்ட அந்த மக்களின் துயருக்கும் பிரித்தானியர்களால் ஒரே முடிக்குரிய நாடாக்கப்பட்டு அதிகாரம் இழந்தமையால் ஒடுக்குதலுக்கு உள்ளான எங்கள் துயருக்கும் வேறுபாடில்லை.
ஈழத் தமிழர்கள் பௌத்த சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சி புகலிடம் தேடி அலைவதுபோல ரோஹிங்யா மக்களும் மியன்மார் பௌத்த பேரினவாத இராணுவ அரசின் இன அழிப்புக்கு அஞ்சி நடுக்கடலில் தத்தளிக்கின்றனர். ஈழ- ரோஹிங்யா மக்களிடையே வரலாற்று ரீதியில் வேறுபாடுகள் இருந்தாலும் சமகாலத்தில் நடைபெறும் ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்பு என்பன ஈழத் தமிழினத்திற்கு எதிரான பயங்கரங்களை ஒத்திருக்கின்றன.
ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். பௌத்த பேரினவாதிகளாலும் பௌத்த பேரினவாத நோக்கில் நேரடியாக இயங்கும் அந்நாட்டு அரசாலும் அதன் இராணுவத்தாலும் ஒடுக்கி அழிக்கப்படும் ரோஹிங்யா இன அழிப்பை உடனடியாக தடுத்து நிறுத்தக் குரல் கொடுப்போம். அது ஒடுக்கப்படும் ஒரு இனம் என்ற அடிப்படையில், ஒடுக்குமுறையின் வலியை அறிபவர்கள் என்ற அடிப்படையில் எங்கள் தார்மீகக் கடமை.
– தீபச்செல்வன்