ஜெர்மனி நாட்டின் வர்த்தக மையமாக பிராங்க்பர்ட் நகரம் திகழ்கிறது. உலக அளவில் முக்கிய போக்குவரத்துகளுக்கான சந்திப்பு பகுதியாகவும் இந்த நகரம் உள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியை எதிர்த்த நாடுகள் ஏராளமான குண்டுகளை வீசின. அப்படி வீசப்பட்ட பல வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. அவை ஜெர்மனி நாட்டின் முக்கிய நகரங்களில் விழுந்து பூமிக்குள் புதைந்து கிடக்கின்றன.
கடந்த ஆண்டு ஆக்ஸ்பர்க் நகரில் மிகப்பெரிய குண்டு கண்டு பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. கடந்த மே மாதம் ஹனோவர் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட குண்டை அகற்ற 54 ஆயிரம் பேரை நகரில் இருந்து வெளியேற்ற வேண்டியதிருந்தது.
இந்த நிலையில் பிராங்க்பர்ட் நகரில் நேற்று முன்தினம் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புதைந்து கிடந்த அந்த குண்டு 1400 டன் எடை கொண்டது.
இங்கிலாந்து நாட்டால் வீசப்பட்டிருந்த அந்த குண்டு எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிராங்க் பர்ட் நகரில் இருந்து சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.
கடந்த 70 ஆண்டுகளாக புதையுண்டு கிடந்த அந்த பயங்கர குண்டுக்கு ஜெர்மனி அதிகாரிகள் “பிளாக்பஸ்டர்” என்று பெயர் சூட்டியுள்ளனர். அந்த பயங்கர குண்டு ஞாயிற்றுக்கிழமை செயல் இழக்க செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.