30 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தாங்கள் எனக்கு வழங்கியுள்ள 30 நாட்கள் விடுப்பு எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவானது 26 ஆண்டுகால கண்ணீரும் வலியும் நிறைந்த ஒரு தாயின் நீதிக்கான போராட்டத்தினை சற்றேனும் ஆற்றுப்படுத்தும், எங்கள் விடுதலையை நோக்கிய நீண்ட துயர் மிகுந்த பயணத்தின் நம்பிக்கையூட்டும் துவக்கப் புள்ளியாகும்.
அய்யா, ஒட்டுமொத்த தனது வாழ்க்கையை எனக்காகவே தொலைத்து விட்ட எனது தாயின் கண்ணீரைத் துடைக்கவும் ஆறுதல் சொல்லவும் வாய்ப்பளித்திருக்கிறீர்கள். என் குறித்த ஏக்கத்திலேயே நோய்வாய்ப்பட்டு விட்ட எனது தந்தைக்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பை தந்திருக்கிறீர்கள். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதி காலத்தினை எட்டிவிட்ட எனது தந்தைக்கான சிகிச்சையினை மேற்கொள்ள இந்த விடுப்பின் மூலம் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள்.
எனது வருகை, மிகவும் சோர்ந்திருந்த அவரது உள்ளத்திற்கு சற்று ஆறுதல் தந்தாலும் அவரது உடல் நோய்க்கான சிகிச்சையினை அளித்து கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுள்ள எனக்கு இந்த விடுப்பு அருமருந்தாகும், மட்டுமல்லாமல் நீண்டகால சிறை வாசத்தால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள எனது உடல் நலனைப் பார்த்துக் கொள்ளவும், உரிய சிறப்பு மருத்துவர்களை அழைத்து ஆலோசனை பெறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
அய்யா, செய்யாத குற்றத்துக்காக இளமையை தொலைத்து விட்டு இருண்ட சிறையில் முடங்கிக் கிடந்த எனக்கு எனது வீட்டின் முற்றத்தில் அமர்ந்து உறவுகளோடு கலந்து பேசும் மகிழ்ச்சி தந்திருக்கிறீர்கள்.
இவை அனைத்திற்கும் எனதும் எனது குடும்பத்தாரின் சார்பிலும் தங்களது தலைமையிலான தமிழ்நாட்டிற்கும் நன்றி சொல்ல வேண்டியது எனது கடமையாகும்.
தற்காலிகமான இந்தச் சுதந்திரக் காற்றை நிரந்தரமாக சுவாசிக்க தேவையான சட்ட நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறேன். தற்போதைய விடுப்புக்கு நன்றி சொல்வதோடு நிரந்தர விடுதலைக்கும் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வேண்டுதலோடு நிறைவு செய்கிறேன். நன்றி.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் பேரறிவாளன்.