அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளைஞர் மைக்கேல் சாய்மன் தனது அசாத்திய திறமையால் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களை கவர்ந்துள்ளார்.
மைக்கேல் சாய்மன் இணைய தொழில் நுட்பம் ஆப் டெவலப்மென்ட் போன்ற விஷயங்களை தன்னார்வத்தில் கற்றுக் கொண்டவர். 13-வது வயதில் மொபைல் ஆப் எப்படி உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இவருக்கு ஆசிரியர்கள் என்று யாரும் இல்லை. கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்கவில்லை. யூ ட்யூப் மூலம் தானாகவே கற்றுக் கொண்டார். சாய்மனின் திறமையை கண்டுபிடித்து வெளி உலகிற்கு கொண்டு வந்தது பேஸ்புக்.
சாய்மன் தனது 17-வது வயதில் இன்டர்ன்ஷிப்-காக பேஸ்புக் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின்னர், ஒரே வருடத்தில் அங்கு முழு நேர பணியாளரானார். பேஸ்புக் நிறுவனத்தில் இளைஞர் சாய்மன் புராடெக்ட் மேனஜராக பணி புரிந்தார். தற்கால இளைஞர்களின் விருப்பம் என்ன? மொபைல் போன்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்? தற்போதைய டிரெண்ட் என்ன? என்பது போன்ற ஆலோசனைகளை பேஸ்புக்குக்கு வழங்கினார் சாய்மன்.
சாய்மனின் திறமையைக் கண்டறிந்த கூகுள் தற்போது அவரை கவர்ந்து கொண்டு விட்டது. சாய்மன் பேஸ்புக்கில் இருந்து கூகுளுக்கு மாறினார். சாய்மன் தற்போது கூகுள் அசிஷ்டண்ட் ஆப்ஸ் பிரிவில் இளம் புராடெக்ட் மேனஜராக பொறுப்பேற்றுள்ளார். சாய்மனுக்கு கடந்த வாரம்தான் 21 வயது நிறைவு பெற்றது.