கடும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்களது உயிர்களை காத்துக்கொள்ள வங்கதேசத்திற்கு அகதிகளாக படகில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மர் நாட்டின் ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர்.
ஆனால், அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பவுத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரோஹிங்யா முஸ்லிம் போராளிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்தன. ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ஏறத்தாழ 87 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்களது தாயகமான வங்காளதேசத்துக்கு சென்றுவிட்டனர். ஆனால் மனித சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களில் மியான்மர் ராணுவம் ஈடுபடுவதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களை அப்புறப்படுத்தும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல், கலவரம் என நிலமை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 முஸ்லிம்கள் இனவாத கும்பல்களினால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால், தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள அண்டை நாடான வங்கதேசத்திற்கு அகதிகளாக படையெடுக்கின்றனர். இதேபோல், நேற்று மூன்று படகுகளில் வங்கதேசத்திற்கு நாஃப் நதி வழியாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென படகுகள் நீரில் கவிழ்ந்தன.
இந்த கோர விபத்தில் 11 குழந்தைகள், 15 பெண்கள் உள்ளிட்ட 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் உள்ள ஐந்து ஆயிரத்திற்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக செல்ல தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.