குஜராத் மாநிலத்தின் வணிக தலைநகரம் ’அகமதாமாத்’ ஆகும். இந்த நகரம் 11-ம் நூற்றாண்டில் ‘அஷ்வல்’ என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், ‘கர்னாவதி’ பெயர் மாற்றம் பெற்றது. 1411-ம் ஆண்டும் சுல்தான் அகமது ஷா இந்நகரத்திற்கு ‘அகமதாபாத்’ என பெயரிட்டார். அந்த பெயரே இன்றுவரை புழக்கத்தில் உள்ளது.
இந்நகரத்தில் பல பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. குறிப்பாக சபர்மதி ஆசிரமம், அகமதாபாத் ரெயில் நிலையம், 1573ல் கட்டப்பட்ட சிதி சையத் மசூதி, 1424ல் கட்டப்பட்ட ஜாமா மசூதி என பல பாரம்பரிய அடையாளங்கள் இந்நகரில் உள்ளது.
இந்நிலையில், யூனெஸ்கோ அமைப்பு இந்நகரத்தை ‘உலக பாரம்பரிய நகரம்’ என ஜூலை மாதம் போலாந்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அறிவித்தது. அதற்கான சான்றிதழை குஜராத் மாநில முதல்வரான விஜய் ரூபானியிடம், யூனெஸ்கோ அமைப்பின் செயலாளர் இரினா பொகோவா வழங்கினார். இந்த புகழைப்பெறும் முதல் இந்திய நகரம் என்ற பெருமையும் அகமதாபாத் நகரம் பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசுகையில், ”இது குஜராத் மக்கள் பெருமை அடைய வேண்டிய தருணம். இது முன்னதாகவே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு தாமதமாக கிடைத்ததற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களின் தவறுகளே காரணம். நமது பிரதமர் நரேந்திர மோடி, 2010ம் ஆண்டு ’பாரம்பரிய நகரம்’ எனும் கனவை கண்டார். அதைத்தொடர்ந்து, இப்போது நமக்கு இந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது”, என்றார்.
குஜராத் மாநில துணைமுதல்வர் நிதின் பட்டேல் இதுகுறித்து கூறியதாவது, “நமது நகரம் முன்னர் உலகம் முழுவதும் வர்த்தகம் மற்றும் வணிகத்தால் அறியப்பட்டது. ஆனால் இப்பொழுது, இது உலக பாரம்பரிய நகரத்தின் மற்றொரு குறியீட்டை பெற்றுள்ளது. மேலும் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது”, என கூறினார்.