மருத்துவம் படிக்க நினைத்த அனிதாவுக்கு, அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்துள்ளது. ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் எடுத்தும், மருத்துவப் படிப்பில் அவரால் சேர முடியவில்லை.
உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா, முடிவில் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவரது சொந்த மாவட்டமான அரியலூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
அனிதாவின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது மரணத்தால், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அனிதாவின் கடைசி நிமிடங்களை அவரது அத்தை ஜெயந்தி நம்மிடம் விவரித்தார்.
” நீட் அடிப்படைல கலந்தாய்வு நடத்தனும்னு உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு, ஊருக்குத் திரும்பி வந்த பிறகும் கொஞ்ச நாள் நல்லாதான் இருந்தா. குழந்தைகளுடன் விளையாடினா. எப்போதும் போலத்தான் பேசிட்டு இருந்தா. ஆடி 18 நாள்ல, அனிதாவின் அம்மாவுக்கு சாமி கும்பிட்டோம்.
அப்போது பூஜையில் அவ அம்மாவோட சேலையை வச்சு கும்பிட்டோம். நேத்து திடீர்னு அந்தப் புடவையை எடுத்து அனிதா கட்டிக்கிட்டா. ஏன் இப்படி பண்ற? என்ன ஆச்சுன்னு கேட்டோம். அதற்கு, ‘ஆசையா இருந்துச்சு அதான் கட்டினேன்’னு சொன்னாள். அவ எப்பவுமே குழந்தை மாதிரிதான்.
அவளுக்கு தேன் மிட்டாய்னா ரொம்பப் பிடிக்கும். நேத்து காலைல தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடப் போறேன்னு சொல்லிட்டுப் போனாள். அதுக்கப்புறம் அவளை நாங்க பொணமாத்தான் பார்த்தோம்.
டாக்டராகி, பொதுமக்களின் கையை பிடிச்சு நாடி பார்க்க வேண்டிய பொண்ணு. ஆனா, இப்போ நாடியே இல்லாத அவ கையைப் பிடிச்சுட்டு நாங்க எல்லாரும் அழுதுட்டு இருக்கோம்” என்றார் வேதனையுடன்.