வணக்கம் அம்மா…
வண்ணங்கள் பல
ஈழ எண்ணங்களாய்
கொண்டு வரலாறானவளே
என் நெஞ்சமர்ந்த
தாயவளே
பூக்களின் வதிவிடமாய்
மலர் நாமம் கொண்டவளே
வணங்குகிறேன் உன்னை
இந்தியத்தை தூசாக்கி
வந்தவனை பொடியாக்கி
நந்தவனமாய் ஈழம் வர
சிந்தையில் நினைவெடுத்தவளே
மாமங்கம் அதிர்ந்து நிற்க
எந்தையாளே நீ
வென்றேகினாய்
உண்ண உணவிருந்தும்
உண்ணா நிலை இருந்து
தன்னந்தனியாக
நீ களமாடி மடிந்த போது
வெக்கி நின்ற இந்தியன்
முன் தலை நிமிர்ந்தோம்
தமிழரிங்கே…
போராற்றல் கொண்டோம்
பாராற்றல் முழுக்க
கள ஆற்றலால் வென்றோம்
தளவமைப்பாற்றல் கொண்டு ஈழ
நிலத்தையே அமைத்தோம்
உங்கள் கல்லறைகள்
நிமிர்ந்து கரவாற்றல்
தந்தும் மாமாங்கம்
முன்னே தாயற்ற
குழந்தைகளாய்
மாமங்கத்தில் நின்றோமன்று
ஆண்டுகள் பல பத்து
அடிமையாகி கழிந்த பின்னும்
வருடங்கள் மூ பத்து
போராகி எழுந்த பின்னும்
நீ ஏற்றிய தீ
அணையாது நிமிர்ந்ததம்மா
அரசாகி தமிழன் மரபாகி
தமிழனை தலைவன்
ஆண்ட மகிழ்வான தருணங்கள்
மறக்காத மஞ்சமாய்
நெஞ்சத்தில் உள்ளதம்மா
இது நீ அறிவாய்
முடவனும் கயவனும்
திருடனும் துரோகியும்
கறையான்களான போது
கல்லறைகள் கூட
நிலையிழந்து
முள்ளிவாய்க்கால் மண்ணில்
முடிவாகி போனதம்மா
கார் முகில்கள் கூட்டத்தின்
குளிர்மைக்குள்
மூடப்பட்டு கிடந்த தமிழன்
வீச்சோடு வெட்டும்
சூரிய வெப்பம் தாங்காது
துடிக்கிறான் இன்று
ஏதிலி என்ற சொல் ஒழிக்க
பசிப் போர் புரிந்தவளே
ஊர் முழுக்க கூடி நின்று
அகதியாக்கி மகிழுதம்மா…
எலும்புகள் உடைக்கப்பட்டு
தசைகள் பிய்த்தெறியப்பட்டு
இரத்த குவியலில்
தமிழினம் சிதைந்து கிடப்பதை
நீ அறியாய்
அதனால் தான்
விழித்து வந்து விடியலுக்காக
விடை தேடாது
உறங்கி கிடக்கிறாய்
அம்மாவே
முடக்கப்பட்டு புதைக்கப்பட்ட
தமிழின் சுதந்திரத்தை
மாமாங்க முன்றலிலே
தட்டி கேட்டிடவே
மீண்டும் வந்திடம்மா
மாண்டு போனவளாய்
மண்ணுக்குள் தூங்காது
விளையும் விதையாய்
முளைத்து வந்திடம்மா
சுபீட்சம் பெற்று
சுதந்திரமடைந்திடுவோம்
கவிமகன்..