அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் நூல் வெளியீட்டுவிழா.
முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவஜகாந்தி கொலைவழக்கில் ஆயுள்த்தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ் ஏதிலிகள் கழகத்தின் செயற்பாட்டாளர் திரு அருந்தவம் பகீரதன் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டுநிகழ்வில் முதல் நிகழ்வாக அண்மையில் அமரத்துவமடைந்த தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடகப்பேச்சாளர் திரு ற்றெவர் கிராண்ட் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மூத்த தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் திரு கோபாலகிருஸ்ணன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அதையடுத்து தாயக விடுதலைப்போரில் மரணித்த உறவுகளுக்கு அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து வெளீயீட்டு உரையினை நூலாசிரியர் திரு பா. ஏகலைவன் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து இணைய வழியாக வழங்கினார்.
தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. முதற்பிரதியினை எழுத்தாளர் திரு. கொற்றவன் அவர்கள் வெளியீட்டு வைக்க, மூத்த தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் திருமதி மனோ நவரட்ணம் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை தமிழ் ஏதிலிகள் கழகத்தைச்சேர்ந்த திருமதி யோ. கரிதாஸ் அவர்கள் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கும், தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரையினை தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளரும் தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்தவருமான திரு வசந்தன் அவர்களும், நூலுக்கான மதிப்பீட்டு உரையினை அக்கினிக்குஞ்சு இணையத்தள ஆசிரியர் திரு பாஸ்கரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். அத்துடன் நீண்ட காலம் ஓஸ்ரேலிய தடுப்பு மூகாம் ஒன்றில் வாழ்ந்த தமிழ் ஏதிலி ஓருவரின் ஆங்கிலத்தினால் ஆன கவிதையும் இடம்பெற்று, நிகழ்வு மாலை 5.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வுக்கு வரமுடியாமல் புத்தகப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமிழ் ஏதிலிகள் கழகத்தை 0479 106 356 அல்லது தமிழ் ஏதிலிகள் கழகத்தை (Tamil Refugee Council) by Email: [email protected] தொடர்பு கொள்ளவும்.