சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் 01 ஆம்திகதி சந்தித்து பேசினார். பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் அளிக்க உதவியதற்காக அவருக்கு அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு அற்புதம் அம்மாள் அளித்த பேட்டி வருமாறு:-
26 ஆண்டுகளுக்கு பிறகு 30 நாட்கள் பரோலில் எனது மகன் பேரறிவாளன் வீட்டுக்கு வந்துள்ளார். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமாக இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக வந்தேன்.
அவரது நண்பர்கள், உடன் படித்தவர்கள், உறவினர்கள் பலர் குடும்பத்துடன் வந்து பேரறிவாளனை பார்த்து மகிழ்ச்சி தெரிவித்துவிட்டுச் செல்கின்றனர். இந்த நிலை நீடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவருக்கு பரோல் கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி.
பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தாயார் என்ற முறையில் எனது ஆசை. ஆனால் அவர் என்னை திட்டுகிறார். ஜெயிலை விட்டு வெளியே வந்த பிறகுதான் திருமணம் செய்ய முடியும். இப்போது ஒரு பெண்ணை ஏன் நான் கஷ்டப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். மருத்துவம் பார்த்து முடிக்கும்போது அவரின் பரோலும் முடியும். பேரறிவாளன் என்னுடன் வசிப்பது நீடிக்க வேண்டும் என்ற ஆசையை கூறியிருக்கிறேன். ஆனால் அரசு என்ன முடிவு எடுக்க இருக்கிறது என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் முதல்-அமைச்சருக்கு பேரறிவாளன் கைப்பட எழுதிய கடிதத்தையும் அற்புதம் அம்மாள் வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
30 நாட்கள் விடுப்பு என்பது, எங்கள் விடுதலையை நோக்கிய நீண்ட துயர்மிக்க பயணத்தின் நம்பிக்கையூட்டும் தொடக்கப்புள்ளியாகும். ஒட்டுமொத்த வாழ்க்கையை எனக்காகவே தொலைத்துவிட்ட எனது தாயின் கண்ணீரைத் துடைக்கவும், ஆறுதல் சொல்லவும் வாய்ப்பளித்து இருக்கிறீர்கள்.
என்னைப் பற்றிய ஏக்கத்தில் நோயாளியாகி வாழ்வின் இறுதிக்காலத்தை எட்டிவிட்ட எனது தந்தைக்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பையும் தந்திருக்கிறீர்கள். எனது வருகை அவருக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது. நீண்ட கால சிறைவாசத்தினால் பாதிக்கப்பட்ட எனது உடல் நலனை சிறப்பு மருத்துவர்கள் மூலம் கவனிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
செய்யாத குற்றத்துக்காக இளமையை தொலைத்து சிறையில் முடங்கிக் கிடந்த எனக்கு வீட்டு முற்றத்தில் அமர்ந்து உறவுகளோடு கலந்து பேசும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறீர்கள். இதற்கு உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் நன்றி சொல்வது எனது கடமை. தற்காலிகமான இந்த சுதந்திர காற்றை நிரந்தரமாக சுவாசிக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.