ரந்தரமான ஜனநாயகத்துக்கு ஏங்குகிறது தாய்லாந்து. ஆனால், அது கைகூடுவதற்கு நிறைய ஆண்டுகள் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அரிசி மானியத் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பைக் கேட்க வருமாறு பணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் யிங்லுக் ஷினவத்ரா, நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 2014-ல் அவர் நீதிமன்றத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நீதிமன்றத்துக்கு வராததால், அரசியல் புகலிடம் கோர வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பலரும் பேசிக்கொள்கின்றனர். அரசின் தலைவராக இருந்த அவருடைய சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவும் ராணுவப் புரட்சி மூலம் 2006-ல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரும் இப்போது வெளிநாட்டில்தான் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இறந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், கிராம வளர்ச்சித் திட்டங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ஆனால், ஜனநாயகத்தின்மீது அவருக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. அவருக்கு அடுத்து பட்டத்துக்கு வந்த அவருடைய மகன் மகா வஜ்ஜிரலங்கன் ராணுவ ஆட்சியாளர்களிடமிருந்து சில அதிகாரங்களை எடுத்துக்கொண்டார். நாட்டின் அரசியல் சட்டத்தில் ஜனநாயகக் கொள்கைகளோ மக்கள் ஏற்கும்படியான நம்பகத்தன்மையுள்ள சட்ட அம்சங்களோ இல்லை.
நாடாளுமன்றத்தின் மேலவைக்கு உறுப்பினர்களை நியமனம் மூலம் நிரப்பிக்கொள்ளலாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் பிரதமராகலாம், ராணுவ அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்கள் உண்டு என்கிறது அந்நாட்டு அரசியல் சட்டம். 2016-ல் நாட்டு மக்களில் 55% பேர்தான் கருத்தறியும் வாக்களிப்புக்கு வந்தனர். அவர்களிலும் 61% பேர் மட்டுமே அரசியல் சட்டத்தை ஆதரித்தனர். மலாய் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இனரீதியாக உள்ள பிளவு அப்போது அப்பட்டமாக வெளிப்பட்டது.
அரசை எதிர்த்துப் பேசுவோர் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றனர், கொடுங்கோல் ஆட்சிக்கான சட்டங்களே இயற்றப்படுகின்றன, மனித உரிமைச் செயல்பாட்டாளர் கள் ராணுவத் தளபதிகளின் தொல்லை களுக்கு ஆளாகின்றனர். 2018-ல் நடத்தப் போவதாகக் கூறியுள்ள பொதுத்தேர்தலைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தினால், நிலையான ஜனநாயக அரசுக்கு வாய்ப்பு இருக்கிறது. யிங்லுக் ஷினவத்ரா தண்டிக்கப்பட்டால், அவர் தியாகியாகிவிடுவார்.
மக்களின் அனுதாபம் அவர் பக்கம் திரும்பும். அதனால் பிற எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிடும். உலக அளவில் அரிசி விலை மிகவும் குறைவாக இருப்பதால், விவசாயிகளுக்குக் கடன் தர வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓச்சா தள்ளப்பட்டிருக்கிறார். இது ஷினவத்ராவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள அரிசி மானியத் திட்ட வழக்கிலிருந்து எந்தவிதத்திலும் மாறுபட்டதல்ல.
தாய்லாந்து ராணுவத் தளபதிகள் தங்களுடைய நெருங்கிய வியாபார சகாக்களுக்கு அரசின் ஒப்பந்தங்களைப் பெறுவதில் சமர்த்தர்கள். இப்போது அதைச் செய்து தங்களுடைய நட்பு வட்டங்களைப் பராமரிக்க வேண்டிய சுமை அவர்களுக்கு இருக்கிறது. ஒரு காலத்தில் தாய்லாந்து பொருளாதாரம் நன்கு கொழித்தது. உள்போராட்டங்களிலிருந்தும் சர்வாதிகாரத்திலிருந்தும் விடு பட்ட இதர ‘ஆசியான்’ அமைப்பு நாடுகள், பொருளாதார வளர்ச்சி பெறத் தொடங்கி விட்டன.
ஒரு நாடு ஜனநாயகரீதியாக நிர்வகிக்கப்படுகிறதா இல்லையா என்று ஆசியான் அமைப்பு கவலைப்படாமல் இருக்கலாம்; சர்வதேச அரங்கில் கவனிக்கப்படும். தாய்லாந்தில் முழு ஜனநாயகம் நிலவவில்லை என்றால், அது அந்நாட்டு ஆட்சி யாளர்களுக்கு எதிராகத் திரும்பும் என்ற கவலை அவர்களுக்கு இருக்க வேண்டும். ஆசியான் அமைப்பின் வருடாந்திரக் கூட்டத் தலைவர் பதவியை மியான்மர் இழக்க நேர்ந்தது இந்தப் பகுதியில் உள்ள பிற நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.