மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்புத் துறை பெண் அமைச்சர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.
35 வருடங்களுக்கு முன் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை கூடுதல் அமைச்சராக செயல்பட்டார்.
யார் இந்த நிர்மலா சீதாராமன்:
ஆகஸ்டு மாதம் 18ஆம் திகதி மதுரையில் பிறந்தவர். பொருளியல் பட்டதாரியான இவர் இந்திய ஐரோப்பிய ஜவுளி வர்த்தகம் என்ற பிரிவில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை மேற்கொண்டார்.
லண்டன் ப்ரைஸ் வாட்டர் ஹவுசில் (price waterhouse) மூத்த மேலாளராக பணிபுரிந்த நிர்மலா சீதாராமன், சிறிது காலம் பிபிசி உலக சேவையிலும் பணிபுரிந்துள்ளார்.
இந்தியாவிற்கு திரும்பி வந்த இவர், ஐதராபாதில் பொது கொள்கை மையத்தின் இயக்குநராக இருந்தார்; பின் 2003-2005 காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக செயல்பட்டார்.
2008ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து பின் 2010ஆம் ஆண்டு கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். .
2014 ஆம் ஆண்டு மே மாதம், மோதி தலைமையில் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அமைச்சரவை விரிவாக்கம்
அமைச்சரவை விரிவாக்கத்தில் இன்று பதவியேற்ற ஒன்பது அமைச்சர்களில் நான்கு பேர் ஓய்வு பெற்ற அதிகாரிகள்.
உலகின் நான்காவது பெரிய ரயில்வே சேவையாக இருக்கும் இந்திய ரயில்வேயில் சமீப காலமாக அடுத்தடுத்து பல விபத்துகள் நேர்ந்ததையடுத்து புதிய ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
வலிமைவாய்ந்த துறைகளில் ஒன்றாக கருதப்படும் வெளிவிவகாரத்துறையில் ஏற்கனவே பெண் அமைச்சராக சுஷ்மா சுவராஜ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.