நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டால் வடகொரியா மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியா ஆறாவது முறையாக நேற்று அணுவாயுத சோதனை நடத்தியது.
வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) நேற்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
நேற்று நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
இதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. சபையும் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா நடந்து கொண்டால் அந்நாடு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவிற்கோ, குவாம் உட்பட எங்கள் நட்பு நாடுகளுக்கோ அதன் பிராந்தியங்களுக்கோ அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டால் வடகொரியா பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.