மற்றவர்களின் மூளையில் இருப்பதை அறியும் தொழில்நுட்பம் வரும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.
‘அறிவியல் சாலையில் பெரிய திருப்பங்கள்‘ என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று முன்தினம்(3) நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) தலைவர் கிரண்குமார் கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-
மூளைக்கு பெரிய சக்தி உள்ளது. அது தன்னில் அதிகமான தகவல்களை சேகரித்து வைத்து கொள்கிறது. மற்றவர்களின் மூளையில், மனதில் என்ன இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் விஞ்ஞானிகளிடம் உள்ளது. இதற்காக பல்வேறு தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றவர்களின் மூளையில் இருப்பதை அறியும் தொழில்நுட்பம் வரும். அந்த நாள் தூரத்தில் இல்லை.
இந்த தொழில்நுட்பம் மூலம் மூளை உள்பட உடலின் அனைத்து அங்கங்களின் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள முடியும். அறிவியல் துறையில் ஏற்படும் மாற்றங்களே அதன் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைகின்றன. ஒவ்வொருவரிடமும் பிறந்தது முதலே அறிவியல் வரத்தொடங்கி விடுகிறது. அனைவரிடமும் அறிவியல் மனநிலை இருக்கிறது.
அதன் வளர்ச்சி குழந்தை வளரும் சுற்றுச்சூழலை பொறுத்து இருக்கிறது. குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவர்களை திட்டி அமைதிப்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல. இவ்வாறு கிரண்குமார் பேசினார்.