உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) நேற்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த பரிசோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தாங்கள் நடத்தியது அணு குண்டு பரிசோதனை அல்ல, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை நடத்தினோம் என வடகொரியா சாதித்துவரும் நிலையில், நேற்று வடகொரியா பரிசோதித்த அணு குண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று பரிசோதிக்கப்பட்ட அணு குண்டு 50 கிலோ டன் அளவிலான அழிவாற்றலை கொண்டது (ஒரு கிலோ டன் என்பது பத்து லட்சம் கிலோ அளவிலான அழிவாற்றலை கொண்டது) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வடகொரியா நடத்திய அணு குண்டு பரிசோதனையைவிட நேற்று நடத்தப்பட்ட பரிசோதனை ஐந்து மடங்கு பெரியதாகும். 1945-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின்மீது அமெரிக்கா வீசிய அணு குண்டைவிட நேற்று நடத்திய பரிசோதனையின்போது வடகொரியா பயன்படுத்திய அணு குண்டின் ஆற்றல் மூன்று மடங்கு அதிகமானதாகும் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.