சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசுபவர்கள் அத்தப்பூ கோலமிட்டு விழாவை கொண்டாடினர். மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு ‘ஓணம் சத்யா’ என்ற விருந்து நிகழ்ச்சி நடந்தது.
கேரள மாநிலத்தில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை, அங்கு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழக- கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டத்திலும் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின.
ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, சுற்றத்தாருடன் இணைந்து வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், விஷூக் கனி படையலிட்டும், 25 வகையான அறுசுவை உணவுகளை படைத்து கொண்டாடினர். சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் அய்யப்பன் கோவிலில் நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடை திறந்து இருந்தது.
சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு ‘ஓணம் சத்தியா’ என்று அழைக்கப்படும் விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பேர் கலந்து கொண்டு வழிப்பட்டனர். அதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜத்தில் அத்தப்பூ கோலம் போடும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பேர் கலந்துகொண்டு ஓணம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
புலியாட்டம், களரி, கதகளி நடனம், திருவாதிரை பாடல் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதன் மூலம் சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மூலம் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.