யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளில் தங்கியிருக்கும் இராணுவத்தினரையும், சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் இராணுவத்தினரையும் யாழ். கோட்டைக்கு இடமாற்றுவதன்மூலம் பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்கமுடியும் என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று வவுனியா மாவட்டத்திலுள்ள விகாராதிபதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இக்கருத்தை வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில், யாழ்ப்பாணக் கோட்டையில் 45 ஏக்கர் காணிகள் உண்டு. முன்னர் இதில் போர்த்துக்கேயர் முகாமிட்டிருந்தனர். அதன்பின்னர் ஆங்கிலேயர் இருந்தனர். இறுதியாக எமது இராணுவத்தினர் இருந்தனர். இருப்பினும் கோட்டையிலிருந்து எமது இராணுவத்தினர் வெளியேறியதால் அது தற்போது வெறுமையாகவே உள்ளது.
அத்துடன் இக்கோட்டை யாழ்ப்பாண நகரின் மத்தியில் இருப்பதால் யாழ். கோட்டையென அழைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருக்கும் சிங்கள மகா வித்தியாலய இராணுவத்தினரை அகற்றி கோட்டையில் விடலாம் என்ற எனது அபிப்பிராயத்தை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
அத்துடன் யாழ். நகரில் பொதுமக்களின் காணிகளில் இருக்கும் இராணுவத்தினரையும் கோட்டையில் விடலாம் எனவும் தெரிவித்துள்ளேன்.
இதன்காரணமாக தமிழ் மக்களின் காணிகளையும் விடமுடியும். அத்துடன் சட்டரீதியான உரிமையுடன் இராணுவத்தினரை கோட்டைக்கு நகர்த்தமுடியும் எனவும் தெரிவித்தார்