பனிரெண்டாம் வகுப்பிற்கு பின் மருத்துவ கல்வியை படிக்க வேண்டுமெனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை நீதிமன்றமும் உறுதி செய்தது.
அந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வேலூரில் உள்ள சி.எம்.சி (கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி), இந்த வருடம் நீட் தேர்வு முறையில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த முடியாது என அறிவித்துள்ளதாகவும், இதனால், 99 எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடங்கள் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து படிப்பிற்கான இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அப்படி வெளியான செய்தி தவறானது என சி.எம்.சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் அட்மிஷனுகு அழைக்க இருக்கிறோம் என சி.எம்.சி கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜேஸ்பர் தெரிவித்துள்ளார்.